Friday, March 28, 2014

பேப்பர் படிக்கத் தெரியுமா?

பேப்பர் படிக்கத் தெரியுமா?

     பேப்பர் அதாவது நாளிதழ் படிக்கத் தெரியுமா? என்ற கேள்வி உங்களுக்கு வாசிக்கத் தெரியுமா என்ற அர்த்தத்தில் அல்ல. பேப்பரை படிக்கத் தெரியுமா? என்பது ஒரு சுலமான கேள்வி அல்ல இதற்கு பதில் தெரியும் என்பவர்களிடம் ஒரு நாளிதழைக் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள் நன்றாக அட்சர சுத்தமாக படிப்பார்கள், ஆனால் படித்து முடித்தவுடன் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் கேள்வி.
நாளிதழ் படிப்பது ஒரு கலை. படிப்பதைவிட படித்ததும் அதை மடித்து வைப்பது படிப்பதைவிட ஒரு பெரிய கலை. நாளிதழை படித்தபின்பு அதன்; மடிப்பை துளிகூட பிசகாமல் மடித்து வைப்பது ஒரு தவம் மாதிரி செய்பவர்கள் நாளிதழ் காதலர்கள் என்றுகூடக் கூறலாம். அவர்கள் மடித்து வைத்த நாளிதழை எடுத்துப் பார்த்தால் புதிய நாளிதழ் மாதிரி யாரும் இன்னும் அந்தப் பேப்பரை பிரித்து படிக்கவில்லை என்று தோன்றுமாறு இருக்கும்.

     ஒரு சமயம் எனது நண்பருடன் ஒரு பெரியவரைப் பார்க்கப் போயிருந்தேன் அவர் வர தாமதம் ஆனதால் வரவேற்பறையிலிருந்த அன்றைய நாளிதழை எடுத்து படித்துக் கொண்டிருந்தேன். நண்பர் அங்கிருந்த ஒரு வார இதழை எடுத்து படித்தார். செய்திகளை வாசிப்பதில் ஆழ்ந்திருந்ததில் நான் சந்திக்கப்போன பெரியவர் அங்கு வந்ததையோ என் எதிரில் அவர் அமர்ந்ததையே கவனிக்கவில்லை. திடிரென நாளிதழை மடித்து வைக்கும் போதுதான் அவரை கவனித்தேன். மன்னிப்பு கோரியவாறே நானும் எனது நண்பரும் எழுந்து நின்றோம். நான் நாளிதழை மடித்து அது ஏற்கனவேயிருந்த இடத்தில் வைத்தேன். எங்களை உட்காரச் சொன்னப் பெரியவர் நான் வைத்த நாளிதழை எடுத்து பார்த்துவிட்டு 'எப்பவுமே இப்படித்தான் மடித்து வைப்பீர்களா? இல்லை இங்கே மட்டும் இப்படி மடித்தீர்களா? என்று கேட்டவுடன் எனக்கு ஒரே திகைப்பு 'இல்ல சார் பேப்பரை படிச்சுட்டு அதன் மடிப்பிலேயே மடித்து வைப்பதுதான் எனது வழக்கம் என்றேன்' 'வெரிகுட்' என்று சொல்லிவிட்டு நான் வந்த காரணத்தைக் கேட்டு செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து ஒரு அரை மணிநேரம் பேசிவிட்டு திரும்பினோம்.
வெளியே வந்தவுடன் எனது நண்பர் என்னிடம் சொன்ன செய்தி என்ன தெரியுமா? ஒரு முறை எனது நண்பர் தனது நண்பருக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்று இந்தப் பெரியவரைப் பார்க்கப் போயிருந்த போது உடன் வந்த ஒரு நண்பர் பேப்பரை படித்துவிட்டு சரியாக மடிக்காமல் வைத்ததை பார்த்த இந்தப் பெரியவர் இவர்கள் எதற்காக வந்தார்கள் என்றுகூட கேட்காமல் ஒரு பேப்பரை சரியாக மடிக்கத் தெரியாதவர்களுக்கு நான் உதவ முடியாது என திரும்பி அனுப்பிவிட்டதாக தெரிவித்தார். அவரது குணம் தெரியாமலேயே எனது வழக்கமான செயலாக நான் நாளிதழை மடித்தது எனக்கு சாதகமாக இருந்துள்ளது. அந்தப் பெரியவரைப் போல நாளிதழை காதலிப்பவர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சுமார் 20 வருடங்களுக்கு எங்கள் ஊரிலுள்ள ஒரு அரசு நூலகத்தில் வாசகனாக இருந்த சமயம் அங்குள்ள நூலகரை நான் கவனித்த போது அவரது நாளிதழ் மற்றும் புத்தகங்கள் மீது அவர் வைத்துள்ள பாசத்தை நேரிலேயே கண்டு வியந்துள்ளேன். நூலகத்தில் உள்ள வார இதழ்கள் அல்லது புத்தகங்களை படிப்பவர்கள் மறுமுறை வந்து படிப்பதற்காகவோ அல்லது பழக்கத்தினாலேயோ மூலையை மடித்து வைப்பார்கள். தினமும் அந்த நூலகர் மூலை மடித்ததாக தெரியும் புத்தகங்களை எடுத்து அந்தப் பக்கத்தை திறந்து அந்த மடிப்பை எடுத்து அந்தப் பக்கத்தை அவர் நீவி விடுவதை நான் வெகுவாக ரசிப்பேன். அப்போது அவர் முகத்தில் ஒரு இனம்புரியாத வெளிச்சம் தோன்றுவதாக எனக்குத் தோன்றியது.  முதல் நாள் கிழந்த வார இதழ் மறுநாள் பார்க்கும்போது கிழிசல் ஒட்டப்பட்டு கசங்கல்கள் இல்லாமல் புதிதாக இருக்குமளவிற்கு சரிசெய்து வைத்து விடுவார் அந்த நூலகர்.

    நூலகத்தில் யாராவது வாசகர்கள் நாளிதழை சரியாக மடிக்காமல் வைத்து சென்றால் இவர் அந்த நாளிதழை மடிப்பு கலையாமல் மடித்து வைப்பதும் மீண்டும் மற்றொரு வாசகர் அந்த நாளிதழை பிரித்து சரியாக மடிக்காமல் வைத்துச் செல்ல இவர் திரும்பவும் அதனை மடித்து வைக்க பல தடவை இதுபோல அவர் செய்வதை பார்த்திருக்கின்றேன். அவரிடம் நான் 'ஒவ்வொரு தடவையும் மடித்து வைப்பதற்கு பதில் ஒரேயடியாக நூலகத்தை பூட்டும் போது  மடித்து வைத்துக் கொள்ளலாமே' என்றதற்கு அவர் 'சரியாக மடிக்காத நாளிதழைப் பார்க்க எனக்கு சங்கடமாக இருக்கிறது அதனால்தான் ஒவ்வொரு முறையும் மடித்து வைக்கிறேன். நான் மடிப்பதை பார்த்து யாராவது இதனை மடித்து வைப்பார்களா என்று பார்க்கிறேன் இதுவரை யாரும் அப்படி செய்யவதில்லை' என்று வருத்தத்தோடு அவர் சொன்ன போது ஒரு குழந்தையைப் போலத்தான் இவர் நாளிதழைப் பார்க்கிறார் என்று எனக்குத் தோன்றியது. நான் நாளிதழை மடிப்பு கலையாமல் இப்பவும் மடித்து வைப்பதற்கு காரணம் அந்த நூலகர்தான். சில நேரங்களில் நான் நாளிதழை சரியாக மடிக்காமல் வைக்கும் போது முகம் மறந்து போன அந்த நூலகர் விரக்தியில் 'யாரும் அப்படி செய்யவதில்லை' என்ற குரல் இன்னமும் என் காதில் ஒலிக்கிறது.

சாதாரணமாக பேன் ஓடும் காற்றிலேயே நாளிதழைப் படிப்பது சிரமம். பேருந்து பயணத்தின் போது ஜன்னலில் வரும் காற்றைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் அந்த காற்றையும்; மீறி சிலர் நாளிதழை காலுக்கு கீழ் வைத்து மடக்கி அது ஒரு பக்கம் இழுக்க இவர் ஒரு பக்கம் மடிக்க கடைசியில் ஒரு குழந்தையின் கையில் கிடைத்த பேப்பரைப் போல கசங்கிய அந்த நாளிதழைப் பார்க்கும் போது எனக்கு வரும் கோபத்திற்கு அளவே இருக்காது. அதனைப் பார்க்கப் பிடிக்காமல் மறுபக்கம் திரும்பிக் கொள்வேன். பச்சையாக சொன்னால் நாளிதழை பேருந்தின் காற்றின் வேகத்திற்கு மீறி படிக்க நினைப்பவர்களைப் பார்த்தால் அந்தக் கால திரைப்படங்களில் நம்பியார் போன்ற வில்லன்கள் பெண்களை கற்பழிப்பது போலத் தோன்றும். பேருந்து பயணத்தில் அதுவும் காலைப்பயணத்தில் இது போன்று நிறைய வில்லன்களைக் காணலாம்.

     நண்பர்களின் வீட்டிற்கோ அல்லது உறவினர் வீடுகளுக்கோ செல்லும் போது அங்கு படிக்கப்பட்ட நாளிதழ்களை மிகவும் மோசமாக ஒரு பழைய பேப்பர் கடையில் உள்ளதைப் போல அடுக்கி வைத்திருப்பதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கும். நாமே கொஞ்ச நேரம் ஒதுக்கி அவற்றை அடுக்கி வைத்துவிடலாமா என்றுகூட தோன்றியதுண்டு. அடுத்த வீட்டில் அதிகப்பிரசங்கித்தனம் வேண்டாம் என்று அமைதியாக வந்துவிடுவதுண்டு. ஆனால் சில வீடுகளில் நாளிதழ்களை அழகாக அடுக்கி வைத்திருப்பதை பார்த்து இதனை செய்தது யார் என்று கேட்டு அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் எனது சந்தோஷத்தையும் தெரிவிப்பதுமுண்டு.
குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களை குழந்தைகள் வளர்ந்த பின்பு தனியாக விட்டுவிட்டு அவர்கள் மட்டும் சொகுசு வாழ்க்கையை தேடிப் போவதைப் போல நாளிதழ்கள் சுடச்சுட செய்திகளை தரும்போது ஆவலுடன் படித்துவிட்டு காரியம் முடிந்தது அதனை அம்போ என்று விடுவது நமக்கு வழக்கமாகிவிட்டது. அதற்காக நாளிதழுக்கு ராஜ வாழ்க்கை கொடுக்கச் சொல்லவில்லை இறுதியில் நாளிதழ்கள் கடைக்கு எடைக்குத்தான் செல்கிறது என்றாலும் அது எடைக்குச் செல்லும்வரை அதற்கான உரிய இடத்தை அளிக்காலாமே?

      கல்வி கற்பித்த ஆசானுக்கே உரிய மரியாதையை இந்த உலகம் தராதபோது படித்ததும் தூக்கி எறியும் பேப்பருக்கு எதற்கு இத்தனை புலம்பல் என்றால் சிலருக்கு சிலவற்றின் மீது இருக்கும் காதல் அலாதியானது. தனது பழைய வெஸ்பா ஸ்கூட்டரை அதிகாலையில் அதன் பாலீஸ் போகுமளவிற்கு துடைத்து அதனை தினமும் ரசனையோடு பார்க்கும் எனது நண்பருக்கு அந்த வெஸ்பாவின் மீது காதல்.  படிக்கவே நேரமில்லாத போதும் புத்தக கண்காட்சி என்றவுடன் தனக்கு பிடித்த புத்தகங்களை எல்லாம் அள்ளிக் கொண்டு வந்து அடுக்கி வைத்து அதனை ரசிக்கும் மனிதர்களும் உண்டு அவர்களுக்கு புத்தகங்களின் மீது காதல். இதைப்போலத்தான் அந்தப் பெரியவர் அந்த நூலகர் ஆகியோருக்கு நாளிதழ்களின் மீது காதல். இவரைப் போன்றவர்கள் நாளிதழுக்கு கொடுக்கும் மரியாதை அளவிற்கு நாம் அவற்றிற்கு கொடுக்காவிட்டாலும் இன்றைய  செய்தி நாளைய வரலாறு என்பதால் செய்தி வரலாறாக மாறும் வரைக்காவது மரியாதை நாளிதழுக்கு அளிக்கலாமே?

Sunday, March 16, 2014

விதியின் விதி

விதியின் விதி
                                                                                             
விதி என்ற ஒன்று உண்டா? என்று கேட்டால் எல்லோரும் ஓரே பதிலைக் கூறமாட்டார்கள். அப்போதைய சூழ்நிலையில் கஷ்டத்தில் இருப்பவர்கள் விதி என்னய பாடா படுத்துது என்பார்கள் நல்ல நிலையில் இருந்தால் நா நல்ல இருக்குனும்ங்கிறது என்னோட அதிர்ஷ்டம் என்பார்கள். நன்றாக இருப்பதற்கு விதிதான் காரணம் என்று சொல்பவர்கள் மிகக்குறைவாக இருப்பார்கள். ஒரு விபத்திலிருந்து தப்பித்தால் நல்ல விதி தப்பிச்சிட்டோம்னா சொல்றாங்க என்னோட அதிஷ்டம் நா தப்பிச்சுட்டன்னு தான் சொல்வாங்க. 
விதியை மாற்ற முடியுமா என்றால்? பதில் இரண்டுவிதமாகத்தான் வரும். முடியும் என்பர் சிலர் முடியாது என்பர் சிலர். தமிழில் 'விதியை மதியால் வெல்லலாம்' என்ற சொல் வழக்கு தமிழில் உண்டு. ஆனால் கவிஞர் கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலில் 'விதியை மதியால் வெல்லலாம்.., ஆனால் மதியால் வெல்வதே விதியாக இருந்தால்?' என்று கேட்டிருப்பார். அது போலத்தான் விதிக்கென்று ஒரு விதி இல்லை ஏனென்றால் அதுவே விதியாக இருக்கிறது.
எல்லாம் விதிப்படிதான் நடக்கிறது என்றால் கடவுள், கோவில் எல்லாம் எதற்காக? இறை நம்பிக்கை எதற்காக? சடங்குகள், சம்பிரதாயங்கள், வேண்டுதல்கள் எல்லாம் எதற்காக? என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். இதற்கான ஓரே பதில்  விதியின் வேகத்தைக் குறைக்க இறையருள் தேவை.
ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் விதியினால் விளையும் தீமைகளைக் குறைக்கத்தான் இறை நம்பிக்கை என்பது. வீட்டில் ஓடும் ஃபேனின் வேகத்தைக் குறைக்க ரெகுலேட்டர் எப்படியோ அப்படித்தான் விதியின் வீரியத்தைக் குறைக்க கடவுளின் அருள் தேவை. ஒரு கதையின் மூலமாக கடவுளின் அருளால் விதி எப்படி மாறுகிறது என்று பார்ப்போம்.
அந்த கிராமத்தில் உள்ள கோவிலின் கோபுரத்தில் இருந்து இரு கிளிகள் பேசிக்கொண்டிருந்தன. அதில் ஒரு கிளி கூறியது 
'அதோ கோவிலிலிருந்து வெளி வர்றாரே ஒரு பெரியவர் அவரும் இந்த ரோட்ல சைக்கிள் ரிக்ஷாஒட்டிட்டு வருபவரும் இன்னைக்கு செருப்பால அடி வாங்கனும்னு விதி இருக்கு' என்றது
அதற்கு இன்னொரு கிளி 'அதெப்படி இரண்டு பேருக்கும் ஓரே மாதிரி விதி இருக்கும்' 
'ஒரு பேருந்துலயோ அல்லது ரயில்லயோ போறவங்க ஏதாவது ஒரு விபத்தில ஒரே நேரத்தில இறக்கிறாங்கல்ல அது மாதிரிதான் இதுவும் இன்னைக்கு கண்டிப்பா இவங்களுக்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கும்' 
'அந்த ரிக்ஷாகாரன் ஒரு குடிகாரன் ஆனா இந்தப் பெரியவர் ஒரு பக்திமான் இரண்டு பேருக்கும் எப்படி ஒரே மாதிரின்னு யோசனையா இருக்கு' 
'ஏன் ஓரே மாதிரி இரண்டு பேருக்கு நடக்கக்கூடாதா?' 
'பெரியவர் எப்போதும் கடவுளின் நாமத்தையே உச்சரித்துக் கொண்டு ஆறு வேளையும் பூஜை செய்து கொண்டிருக்கிறார். நமக்கு தெரிந்து அவர் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லை அவருக்கு எப்படி நீ சொல்வது நடக்கும்' 
'எல்லாம் சரி ஆனால் போன பிறவியில் இவங்க இரண்டு பேரும் செய்த ஏதோ ஒரு பாவத்திற்கு தண்டனையாக இன்றைக்கு அவங்களுக்கு இப்படி நடக்க வேண்டுமென விதி இருக்கிறதே நாம் என்ன செய்வது'
 'அப்ப கடவுளை பூஜித்து கடவுளின் நாமத்தையே சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கும் கடவுளை நிந்தனை செய்து கடவுள் பெயரை சொல்வதே பாவம் என்றிருப்பவர்களுக்கும் ஒரே விதிதான் என்றால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது' 
'நமக்குள் ஏன் சண்டை நாம இந்த இரண்டு பேரையும் தொடர்ந்து சென்று பார்ப்போம் விதி ஜெயிக்கிறதா? இல்லை அவர் வணங்கும் கடவுள் அவரை காப்பாற்றுகிறாரா என்று' 
இரண்டு கிளிகளும் முதலில் ரிக்ஷாக்காரனை தொடர்ந்தன. வழியில் ஒரு முரடன் நன்றாக குடித்திருந்தவன் ரிக்ஷாவை நிப்பாட்டி 
'என்னய எ வீட்டில கொண்டு போய் விட்டுடு' என்று சொல்ல ரிக்ஷாக்காரனும் 'உன்னோட வீடு எங்க' ன்னு கேட்க 'என்னோட வீடு எதுன்னு தெரியாம நீ ஏ ரிக்ஷா ஒட்டுற' என்று தகராறு செய்ய கொஞ்ச நேரத்தில ரிக்ஷாக்காரனை குடிகாரன் அடிக்க பதிலுக்கு இவனும் அடிக்க கடைசியில் குடிகாரன் ரிக்ஷாக்காரனை செருப்பை கழட்டி அடித்தான். கூட்டம் அதிகமாக கூடி வேடிக்கை பார்க்க அவமானப்பட்ட ரிக்ஷாக்காரன் அவனுடன் சண்டைபோட முடியாமல் அவமானத்திற்கு பயந்து ரிக்ஷாவை எடுத்துக் கொண்டு மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டே அங்கிருந்து சென்றான். முதல் கிளி 'பார்த்தாயா எத்தனை ஜனங்களுக்கு முன்னால் தேவையில்லாமல் வந்த சண்டையில் ரிக்ஷாக்காரன் அவனது விதிப்படி செருப்பால அடி வாங்கி அவமானப்பட்டு போனான். இதுதான் விதி, விதியை மாற்ற முடியாது.' என்றது 'சரி வா அந்தப் பெரியவர் வீட்டுக்குச் சென்று பார்க்கலாம்' என்று சொல்லி இரண்டு கிளிகளும் பறந்து சென்றன.
 அந்தப் பெரியவர் எப்போதும் கடவுளின் நாமமான 'ஈஸ்வரா' என்று உச்சரித்துக் கொண்டேயிருப்பார். நெற்றி நிறைய விபூதியை பட்டையாக அடித்திருப்பார். பார்க்கவே பக்திபழம் போல இருப்பார். கோவில் குளம் என்று தவறாமல் செல்பவர். ஊரிலிருந்தால் காலை மாலை என்று இருவேளையும் அங்குள்ள சிவன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருவார். அங்குள்ள பூசாரி இவர் வராத நாள்களில் இவர் வெளியூர் சென்றுள்ளார் என்று புரிந்து கொள்ளும் அளவிற்கு தினமும் கோவிலுக்குச் செல்வார். அவரது வீட்டின் பூஜை அறையில் தினமும் ஆறுகால பூஜை நடைபெறும். எதற்கெடுத்தாலும் 'ஈஸ்வரா' என்ற சொல்லிக்கொண்டேயிருப்பார். அன்று மாலை தனது வீட்டின் திண்ணையில் வந்து சாய்வு நாற்காலியில் 'ஈஸ்வரா' என்று சொல்லிக் கொண்டே அமர்ந்தார்
அருகிலிருந்த மரத்தில் வந்தமர்ந்த அந்தக்கிளிகள் காத்திருந்தன. மாலை முடியப்போகும் தருணம் அவர் வீட்டின் முன் ஒரு குதிரை வண்டி வந்து நின்றது அதிலிருந்து ஒரு தம்பதியும் ஒரு குழந்தையும் இறங்க பெரியவர் 'ஜானகி இங்க வா யார் வந்திருக்காங்கன்னு பார் நம்ம மகனும் மருமகளும் வந்திருக்காங்க' என்று ஆவலோடு கூறிக்கொண்டு தனது பேத்தியை கொஞ்சியவாறு தூக்கிக் கொண்டு உள்ளே சென்றார். 
சிறிது நேரத்திற்குப் பிறகு பெரியவர் வழக்கம் போலத் திண்ணையிலுள்ள அவரது சாய்வு நாற்காலியில் 'ஈஸ்வரா' என்று சொல்லிக்கொண்டு அமர்ந்தார். வீட்டிற்குள் வந்தவர்கள் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. சிறுது நேரத்தில் திண்ணைக்கு தவழ்ந்து வந்த அவரது பேத்தியை அவர் கவனிக்கவில்லை. கண்களை மூடி அமர்ந்திருந்தார். அக்குழந்தை அவரது அருகில் வந்து தனது கையை வைத்து அவரை எழுப்ப நினைக்க கை அருகிலிருந்த செருப்பினை எடுத்து அவர் மீது தூக்கி எறிந்தது. கண்மூடியிருந்தவர் தன்மீது ஏதோ விழுவதைக் கண்டு கண்விழித்து பேத்தியைப் பார்;த்தவுடன் 'டேய் குட்டிப்பொண்ணு தாத்தாவை இப்படியாட எழுப்புறது' ன்னு சொல்லிக் கொண்டு தன் மீதிருந்த செருப்பினை அதன் இடத்தில் வைத்துவிட்டு பேத்தியை தூக்கி கொஞ்ச ஆரம்பித்தார். 
 கிளிகள் தங்களுக்குள் ஒன்றுக்கொன்று பார்த்துக் கொண்டன. ஒரு கிளி கூறியது 
'பார்த்தாயா கடவுளின் நாமத்தை ஜெபித்துக்கொண்டேயிருப்பவர்களுக்கு கடவுளின் அருள் என்றுமிருக்கும் என்பதை இதோ இந்த நிகழ்ச்சி நமக்கு காட்டிவிட்டது. அவரது விதிப்படி செருப்பால் அவர் அடிவாங்கி விட்டார், ஆனால் அதைகூட சந்தோசமாக மாற்றியது கடவுளின் அனுக்கிரகம்தான்' என்றது அதற்கு மற்றொரு கிளி 
'என்னைப் பொறுத்தவரை விதியை மாற்ற முடியாது என்கிற வாதம் ஜெயித்து விட்டது ஆனால் இரண்டு நிகழ்ச்சிகளிலும் ஒரே விதி கடவுள் நம்பிக்கையால் எவ்வளவு பெரிய மாற்றம் உண்டாக்கிவிட்டது? கடவுள் நம்பிக்கை விதியை மாற்றாது ஆனால் விளைவைக் குறைக்கக்கூடும் என்று தோன்ற வைத்துவிட்;டது.' என்றது. 
இந்தக்கதையிலிருந்து நாம் அறிந்து கொள்வது விதியிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளை கடவுளின் அருளினால் குறைத்துக் கொள்ளலாம். 
ஒரு மன்னனுக்கு அவரது ஆஸ்தான ஜோதிடர் மன்னருக்கு நாகம் தீண்டித்தான் மரணம் சம்பவிக்கும் என்று சொல்ல மன்னனோ நாகம் வராத இடமாக கடலைத் தேர்தெடுத்து கடலுக்குள் ஒரு மாளிகை அமைத்து வாழ்ந்தான் ஒரு நாள் பூஜை செய்ய வைத்திருந்த பூவிலிருந்த பூநாகம் தீண்டி மரணமடைந்தார் என்றொரு கதையுண்டு. என்னதான் கடலுக்குள் சென்று அவனது உயிரைக் காக்க அவன் முயற்சித்தாலும் அவனது விதியை மாற்ற முடியவில்லை. 
விதி வலியதுதான் ஆனால் விதியை நினைத்துக் கொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் இவ்வுலகில் நம்மால் நிம்மதியாக முடியாது. இரவுப்பயணமாக வெளியூர் பயணம் செல்லும் போது ஓட்டுநர் நம்மை நல்லபடியாக நாம் போகும் இடத்திற்கு கொண்டு சேர்;ப்பார் என்ற நம்பிக்கையில்தானே பயணத்தின் போது நிம்மதியாக உறங்கிக் கொண்டு செல்கிறோம். அதைவிடுத்து ஓட்டுநர் நன்றாக ஓட்டுவாரா? இல்லை தூங்கிவிடுவாரா? என்ற சந்தேகம் மனதில் வந்து விட்டால் நம்மால் அன்று இரவு பயணத்தின் கொஞ்சம்கூட உறங்காமல் மனதில் பயத்தை வளர்த்துக் கொண்டு வாகனத்தின் சிறிய குலுங்கலுக்குகூட நமது இரத்த அழுத்தம்  உயர்ந்து,  காலையில் பயணம் முடியும் போது உயர் இரத்த அழுத்தத்தோடு நமது உடல்நிலையை நாமே பாழ்படுத்திக்கொள்கிறோம். ஓட்டுநரை நம்பியவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் நம்பாதவர்கள் அவர்களே அவர்களை கெடுத்துக் கொள்கிறார்கள். இதைப் போலத்தான் கடவுளை நம்பி அவரிடம் நமது வாழ்க்கையை விட்டு விட்டு யாருக்கும் கெடுதல் எதுவும் செய்யாமல் நமது பணியினைப் பார்த்துக் கொண்டிருந்தால் நாம் நமது விதியைப் பற்றி கவலைப்பட அவசியமில்லை.
நம்மை படைத்த கடவுள் நமக்கு நல்லதே செய்வார் என்ற நம்பிக்கை நம்மை வாழ வைக்கும். நல்லவைகளைச் செய்து இறையருளோடு வாழ நினைத்தால் நமக்கென விதிக்கப்பட்ட  விதியின் விளைவை தாங்கும் வல்லமை அந்த இறைவன் அருள்வான்.
திருவள்ளுவர் விதியைப் பற்றி இரண்டுவிதமாகக் கூறியுள்ளார்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுற் தான்முந் துறும்

விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும் வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும், ஆகவே விதியை விட வேறு எவை வலிiயானவை என்று ஒரு குறளில் அவர் பயமுறுத்தினாலும்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞந்று பவர்

தளர்ச்சியில்லாமல் தொடர்நது முயற்சி செய்து கொண்டேயிருந்தால் நமக்கு விதிக்கப்பட்ட விதியானது புறமுதுகு காட்டி ஓடிவிடும் என்கிறார்.

எனவே விதி நம்மோடு விளையாட வரட்டும் கடவுளின் துணையோடு அவற்றை சந்திப்போம் என்ற தைரியமும் நம்பிக்கையும் நம் மனதில் இருத்திக் கொண்டால் எதிலும் ஜெயமே !!!
  

இரவு காப்பகங்கள்

    இரவு காப்பகங்கள்
                                                                                                                                  

இரவு காப்பகங்கள் (Night Shelters) என்பது சமீப நாள்களில் நாளிதழ்களில் பரவலாக அடிபடும் செய்தி. டெல்லி உயர்நீதி மன்றம் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அவர்களை கடிந்து கொண்டது இதனோடு தொடர்புடைய விஷயமாகும். டெல்லி உயர்நீதிமன்றம் வீடில்லாத மக்களுக்கு இரவு காப்பகங்கள் அமைப்பதில் டெல்லி அரசு முறையான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தாமல் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றும் நீதிமன்றம் இந்த விஷயத்ததில் சந்தோஷப்படவில்லையென்றும் கூறியுள்ளது செய்தியாக வந்துள்ளது.
இதற்கான அடிப்படை என்னவென்றால் உச்ச நீதிமன்றத்தில் பொது உரிமைகளுக்கான மக்கள் சங்கம் இந்திய அரசின் மீது தொடரப்பட்ட வழக்கில் வட இந்தியா மட்டுமல்லாதது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இரவில் குளிரினாலோ அல்லது வெப்பத்தினாலோ பொதுமக்கள் உயிரிழப்பது தொடர்வதை தடுக்க இந்திய அரசும் மாநில அரசுகளும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றும் இது இந்திய அரசிலமைப்புச் சட்டம் 21 வது பிரிவிற்கு முரணானது என்றும் வழக்கு தொடர்ந்தது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21 ல் 'ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளின்படி அல்லாமல் எந்த ஒரு மனிதரின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுதல்;கூடாது' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 27.12.2012ல் அனைத்து மாநிலங்களும் வீடில்லாத மக்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21ன் படி உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டுமென ஆணை பிறப்பித்தது. 
மேற்படி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 2001 ம் ஆண்டிலிருந்தே நடந்து கொண்டிருக்கிறது.  27.01.2010ம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால தீர்ப்பின் அடிப்படையில் மாநில அரசுகள் இரவு காப்பகங்கள் அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கின. இது தொடர்பான முன்னேற்பாடுகளை கவனிக்க அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி மன்றங்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை அலுவலகங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்திரவிட்டது. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் உடனடியாக இரவு காப்பகம் அமைத்து அதற்கான புகைப்படத்தினை சென்னைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்தது. முக்கியமாக குளிரினால் அதிகமாக பாதிக்கப்படும் மலைவாசஸ்தலமான ஊட்டி கொடைக்கானல், வால்பாறை மற்றும் ஏற்காடு ஆகிய ஊர்களின் உள்ளாட்சி மன்றங்களுக்கும் உத்திரவிடப்பட்டிருந்தது. 
இது தொடர்பாக ஒரு நடந்த நிகழ்வினை கூற விரும்புகிறேன். கொடைக்கானல் நகராட்சிப் பகுதியில் இரவு காப்பகம் அமைக்க நகராட்சி ஆணையாளரும் மற்ற வெளி அலுவலர்களும் வீடில்லாமல் தெருவில் தங்குபவர்கள் பற்றி அறிய ஊர் முழுவதும் சுற்றி சுற்றி வந்தனர். இந்த கடையில் ஒருத்தர் இரவில் படுப்பார் என யாராவது சொன்னால் உடனே அந்த கடைக்குச் சென்று பார்த்தால் அன்றிரவு அங்கு யாரும் வந்து படுப்பதில்லை என்று தெரியவே இரவு 12 மணியாகிவிடும் அதற்குப் பிறகு அந்த அலுவலர் குளிரில் வீட்டிற்குச் செல்ல வேண்டும். வெளி அலுவலர்கள் அனைவரும் அலுவலகப்பணிகளை எல்லாவற்றையும் விட்டுவிட்டு இதற்கே இரண்டு மூன்று நாட்கள் அலைந்து, கடைசியில் நான்கு பேரை பிடித்துக் கொண்டு வந்தனர். தெருவில் படுப்பவர்கள் நால்வரை அழைத்துக் கொண்டு வந்தனர் அந்த நால்வருமே கொடைக்கானலில் உள்ள சுற்றுலா பயணிகள் வந்து போகும் இடங்களில் பிச்சையெடுப்பவர்கள்;. இரவில் நகரின் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பகுதியில் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
வீடில்லாதவர்களைத் தேடிப்போன அந்த வெளி அலுவலர் தனக்கு பதவி உயர்வு வந்திருந்தால் கூட இவ்வளவு சந்தோசப்பட்டிருப்பாரா என்பது சந்தேகப்படும் அளவிற்கு நான்கு பேர் கிடைத்துவிட்டார்கள் என்று மகிழ்ச்சியாக இருந்தார். பின்னர் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நகராட்சிக்குச் சொந்தமான ஒரு விடுதியில் அவர்களுக்கு புதிய கம்பளி, பெட்ஷீட், தலையணை அத்துடன் காலை உணவு ஒரு ஹோட்டலில் மதியம் ஒரு ஹோட்டலில் இரவு ஒரு ஹோட்டலில் என தொடர்ந்து தினமும் இரவு காப்பகத்திற்கே கொண்டு வந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சகல வசதிகளுடன் இரவு காப்பகத்தினை நகர்மன்றத்தலைவர் அவர்கள் தலைமையில் துவங்கப்பட்டது. விழா முடிந்து புகைப்படம் எடுத்து சென்னைக்கு அனுப்பப்பட்டு விட்டது.. மறுநாள் காலை அங்கு சென்று பார்த்தால் ஒருவருமே அங்கில்லை. சரி பகல்தானே தங்களது தொழிலுக்கு சென்றுள்ளார்கள் போலும் இரவ வருவார்கள் என்று பார்த்தால் அன்றிரவு யாருமே வரவில்லை. கம்பளி தலையணையுடன் நால்வரும் எஸ்கேப். மறுநாள் ஆணையாளரின் உத்திரவுபடி சம்மந்தப்பட்ட நபர்களைத் தேடி மீண்டும் ஒரு வலைவீசி கண்டுபிடித்தால் நால்வரில் ஒருவருக்கும் இரவு காப்பகத்தில் தங்க பிடிக்கவில்லை என்றதோடு கட்டாயப்படுத்தி மீண்டும் அங்கு எங்களை கொண்டு சென்றால் நாளையே திரும்ப இங்கே வந்து விடுவோம் என உறுதியாகச் சொல்லும்போது உள்ளாட்சி அலுவலர்களால் ஏதும் செய்ய இயலாத நிலை.  எங்களுக்குப் பழைய வாழ்க்கைதான் சிறந்தது என்றுக்கூறி சென்று விட்ட பிறகு வலுக்கட்டாயமாக இதில் எதுவும் செய்ய இயலாத சூழ்நிலை.  அநேகமாக எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். 
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21ன் கீழ் நடவடிக்கை எடுத்;து அவர்களை காப்பாற்ற நினைத்தால் அவர்களோ அதே இந்திய அரசியலமைப்புச் சட்டம் 6ன் படி யாரும் எங்கு வேண்டுமானாலும் சுகந்திரமாக வாழலாம் என்கின்றனர். எனது வாழ்க்கையை நீ தீர்மானிக்காதே என்று சொல்லும் போது நீதிமன்றங்களும் அரசாங்கமும் என்னதான் செய்ய முடியும்.  உதவிகளை வலியச் சென்று செய்தாலும் அதனை வாங்குவோர் வாங்க விரும்புவதில்லை. அரசாங்கமும் நீதிமன்றங்களும் அரசியலமைப்புச் சட்டத்தை முறையாக அமுல்படுத்த தகுந்த நடவடிக்கைகளை மேற்க்கொண்டால் மக்களின் விருப்பம் வேறாக இருக்கிறது.