Saturday, February 8, 2014

புதிய இல்லத்தில் சோலார் அமைப்பது தொடர்பான சில அடிப்படை விவரங்கள்

புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது கட்டப் போகிறீர்களா? தங்களது இல்லத்தில் சோலார் மின்சாரம் அமைப்பது எப்படி என்று சில அடிப்படை விவரங்களைப் பார்ப்போம். சிப், சிலிக்கான், சோலார் கதிர் போன்ற சூரிய மின்சக்தி எப்படி தயாராகிறது என்பதை பற்றி குழப்பாமல் நமக்குத் தேவையான சூரியமின்சக்தி தொடர்பாக மட்டும் பார்க்கலாம்
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி மின்தட்டுப்பாடு தவிர்க்க இயலாதது இது மட்டுமல்ல இனி வருங்காலங்களில் நமது மின்சாரத் தேவைக்கேற்ப மின் விநியோகம் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனென்றால் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் மின்சாரத் தேவைக்கேற்ப மின்உற்பத்தி அதிகரிப்பதில்லை என்பது தெரிந்த ஒன்றுதான். எனவே வீடு கட்டும்போதே அதற்கான முன்னேற்பாடுகளை நாம் கவனிக்கும்பட்சத்தி;ல் ஒரளவிற்கு மின்தேவையை நம்மால் சமாளிக்க முடியும்
ஏற்கனவே வீடுகட்டியிருப்பவர்கள் இன்வெட்டர்; வைத்து தங்களது மின்தேவைகளை சமாளித்துக் கொள்கிறார்கள். அதே முறைதான் ஆனால் கூடுதலாக சோலார் பேனல் மற்றும் சார்ஜ் கன்ட்ரோலர் என்ற இயந்திரம்  ஆகிய இரண்டையும் மட்டும் வாங்கி மாட்டினால் நமது மின்தேவையில் ஒரு பகுதியை சோலார் தயாரித்துக் கொள்ளும். உலகிலேயே இந்தியாவில்தான் வருடத்திற்கு அதிகபட்சமாக  300 நாட்கள் முழு அளவிற்கு சூரிய வெளிச்சத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும்.
புதிதாக கட்டப்படும் வீட்டில் கண்டிப்பாக இன்வெட்டர் வைக்க என்று தனியாக இடம் மட்டுமல்ல நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும். எனவே அதனுடன் கூடுதலாக ஒரு தொகையை ஒதுக்கினால் தினந்தோறும் நமது மின்சாரத்தேவையில் ஒரு பகுதியை சோலாரில் பயன்படுத்தலாம்
சாதாரணமாக ஒரு வீட்டில் இன்வெட்டர் வைக்கும்போது மின்சாரம் இல்லாதபோது 2 பேன்கள் 3 லைட்டுகளை 3 அல்லது 4 மணிநேரம் இயங்குவது மாதிரி வைப்பது வழக்கம். இதற்கு ஒரு 150 எ.ஹெச் பேட்டரி மற்றும் 850 வி.ஏ இன்வெர்ட்டர் சரியாக இருக்கும். சோலார் வைக்க இதனை இரண்டு 150 எ.ஹெச்  பேட்டரிகள் மற்றும் 1000 வி.ஏ இன்வெர்ட்டராக மாற்ற வேண்டும். இதற்கு சற்று கூடுதலாக  செலவாகும். ஆனால் 1கேவி சோலார் பேனல் பயன்படுத்த இந்த பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் போதுமானது. 1 கேவி என்பது 1000 வாட்ஸ். இந்த 1000 வாட்ஸ் பேனலில் தினந்தோறும் 5 யூனிட் வரை மினசாரம் சேமிக்க முடியும். இரண்டு மாத்திற்கு ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடுவதால் 60 தினங்களுக்கு நாம் 300 யூனிட்கள் வரை மிச்சப்படுத்தலாம். 
1000 வாட்ஸ் சூரிய சக்தி பேனல் வாங்க அதன் தயாரிப்பு நிறுவனத்தை பொறுத்து விலை விகிதம் மாறுபடும் சராசரியாக ஒரு யூனிட் சோலார் பேனல் 40 முதல் 60 வரை இருக்கும். 1000 வாட்ஸ்க்கு 40000 முதல் 60000 வரை ஆகும். இதன் ஆயுள் காலம் சுமார் 15 முதல் 20  ஆண்டுகளாகும்.  நாம் பயன்படுத்தும் பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர்களின் ஆயுள் காலம் அந்தந்த நிறுவனத்தைப் பொறுத்து 2 முதல் 4 ஆண்டுகாலம் இருக்கும். பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர்களை 3 அல்லது 4 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றியேத் தீர வேண்டும். ஆனால் சோலார் பேனல் 15 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்பதால் நமது முதலீடு கண்டிப்பாக லாபத்தையே தரும் என உறுதியாக நம்பலாம். சோலார் சார்ஜ் கன்ட்ரோலரின் விலையும் அதன் நிறுவனத்தைப் பொறுத்து அமையும் இதுவும் சாராசரியாக ரூ.2000 முதல் 5000 வரை இருக்கும். தற்போது சார்ஜ் கன்ட்ரோலருடன் இணைந்த இன்வெர்ட்டர்களும் கிடைக்கின்றன.
இந்த செலவினத்திற்கு தகுந்த வரவு இதில் உண்டா என்று பார்த்தால் பதில் சரியாக சொல்ல இயலாது.  இது ஒரு மறைமுக வரவாகவேப் பார்க்க வேண்டும். சற்று விளக்கமாவே பார்க்கலாம். நாம் சோலார் இல்லாமல் இன்வெர்ட்டர் பயன்படுத்தும்போது மின்சாரம் தடைபட்டால் இன்வெர்ட்டர் இணைப்பிலுள்ள பேட்டரிலிருந்து நாம் மின்சாரத்தைப் பெறுகிறோம். மீண்டும் மின்சாரம் வந்தவுடன் பேட்டரியிலிருந்து எடுக்கப்பட்ட மின்சாரம் மீண்டும் பேட்டரிக்குப் போய்ச் சேரும். (தண்ணீர் தொட்டியிலிருந்து குழாய் மூலம் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் பின்னர் மோட்டார் மூலம் மீண்டும் நிரப்புது போல). இதனால் மின்சாரம் இல்லாதபோதும் நாம் இன்வெர்ட்டர மற்றும் பேட்டரி மூலம் மின்சாரத்தைப் பயன்படுத்துவதால் நமது மின்பயன்பாடு இரட்டிப்பாகிறது. சுருக்கமாகச் சொன்னால் மின்சாரம் இல்லாதபோதும் நாம் மின்சாரத்தை பயன்படுத்துவதால் நமக்கு சிரமங்கள் குறைகின்றன. சிரமங்களைக் குறைக்க செலவு செய்தாக வேண்டும் என்பது நிதர்சனமான ஒன்றுதானே.
இல்லை எனக்கு கணக்குப்படி சோலார் போட்டால் லாபமா நஷ்டா என்று தெரிய வேண்டுமானால் அதையும் பார்ப்போம். 1கேவி அதாவது 1000 வாட்ஸ் சோலார் இணைப்பு கொடுத்த வீட்டிற்கு ஒரு நாளைக்கு சுமார் 5 யூனி;ட் மிச்சமாகும் என்று கணக்கிட்டால் ஒரு மாதத்திற்கு 150 யூனிட் வருடத்திற்கு 1800 யூனிட் 20 வருடத்திற்கு 36000 யூனிட் சராசரியாக ஒரு யூனிட்டிற்கு ரூ.4 என்று கணக்கிட்டால் ( 20 வருடங்களுக்குப் பிறகு யூனிட் கண்டிப்பாக இதைவிட அதிகமாகத்தான் இருக்கும்) ரூ1,44,000 மிச்சமாகும். இதில் நமது இன்றைய செலவு என்று பார்த்தால் சுமார் 60000 மட்டும்தான் (இன்வெட்டர் கண்டிப்பாக அனைவரும் தங்களது வீட்டில் வைப்பார்கள் என்ற நோக்கத்தில் சோலார் பேனல் மற்றும் சார்ஜ் கன்ட்ரோலர் செலவு மட்டும்) இது லாபமா நஷடமா என்பது அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது. ஆனால் சோலார் போடும் பட்சத்தில் அதிகபட்சமாக தொடர்ந்து 4 மணிநேரம் மின்சாரம் தடைபட்டாலும் சோலாரினால் மின்சாரம் தடைபடாமல் வரும் என்பதை நிச்சயமாச் சொல்லலாம். பகல் முழுவதும் பராமரிப்பு பணிக்காக மின்சார வாரியம் மின்சாரத்தை நிறுத்தினால் பகலில் 2 பேன்களை தொடர்ந்து 7 முதல் 9 மணிநேரம் வரை பயன்படுத்த முடியும்.
இன்னும் நான் சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மின் இணைப்பு கொடுக்கும் போதே பேன் மற்றும் மின்விளக்குகளுக்கு தனி இணைப்பும் மற்றவற்றிற்கு தனி இணைப்பும் கொடுக்க வேண்டும். பின்பு இன்வெர்ட்டர் இணைப்பை பேன் மற்றும் மின் விளக்குகளுக்கு என்று உள்ள  இணைப்புடன் இணைக்கப்பட வேண்டும். பிறகு தினசரி இந்த மின் இணைப்பை காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை துண்டித்துவிட்டால் மின்சார சேமிப்பு இன்னும் அதிகமாகும். ஏனென்றால் காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை நாம் பயன்படுத்துவது பேட்டரியிலுள்ள மின்சாரத்தை. பேட்டரியோ தனக்குத் தேவையான மின்சாரத்தை மாலை 5 மணிவரை சூரியசக்தி பேனல் மூலம் கிடைப்பதால்; பேட்டரியில் சார்ஜ் குறைய வாய்ப்பில்லை.
முதலில் மேலே சொன்னவாறு இரண்டு 150 எ.ஹெச் பேட்டரிகள் மற்றும் 1000 வி.ஏ இன்வெர்ட்டர் மாட்டினால் பிறகு சிறுது நாள் கழித்துகூட சோலார் பேனலை மட்டும் மாட்டிக் கொள்ளலாம். ஆனால் புதிய வீடு கட்டும் போது செலவோடு செலவாக இதனை செய்து விட்டால் பின்னால் கஷ்டமில்லலாமல் இருக்கலாம். நாளைக்கு என்று ஒத்திப்போடும் போது அது கடைசிவரை நிறைவேற்றப்படாமலேயே போகலாம்.
எனக்கு மின்சார வாரிய இணைப்பே இல்லாமல் சோலரிலேயே பயன்படுத்த வேண்டும் என்பவர்களுக்கு. சூரிய பேனலிலிருந்து பேட்டரியில் சேகரமாகும் டிசி மின்சாரத்தை ஏசி யாக இன்வெர்ட்டர்கள் மாற்றித் தருவதால் நாம் வழக்கமாக மின்சாரத்தை பயன்படுத்துவதைப் போல பயன்படுத்துகிறோம். மின் இணைப்பே வேண்டாம் என்றால் பகலில் சேகரமாகும் மின்சாரம் இரவில் சுமார் 4 மணிநேரத்திற்கு மட்டுமே இருக்கும். அதுவும் அதிகபட்ச வாட்ஸ் உள்ள டிவி, பிரிட்ஜ், மிக்ஸ் மற்றும் மோட்டார் ஆகியவற்றை பேட்டரி மூலம் பயன்படுத்த இயலாது என்பதால் இம்முறை சாத்தியமில்லாதது.
எல்லாம் சரி சோலார் இணைப்பிற்காக அரசாங்கம் மான்யம் தருகிறதே அதை எப்படி பெறுவது என்பதைப் பற்று சொல்லவேயில்லையே என்றால் அதற்கு பதில். மாநில அரசாங்கத்தின் (வுநுனுயு) தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்தில் பதிவு பெற்ற சோலார் நிறுவனங்கள் மூலமாக சோலார் இணைப்பு பெற்றால் அவர்கள் தங்களது நிறுவனத்தின் மூலம் இன்வெர்ட்டர்,பேட்டரி,சோலார்,பேனல்,சார்ஜ் கன்ட்டோலர் என்று அனைத்திற்கு மொத்தமாக கணக்கிட்டு அதில் அரசாங்க மான்யத் தொகை கழித்து மீதமுள்ள தொகையை செலுத்தினால் சோலார் இணைப்பை அளிப்பார்கள். மான்யத் தொகையை பின்னர் அவர்கள் நமது சார்பில் பெற்றுக் கொள்வார்கள். இந்த சலுகையைப் பெற குறைந்த பட்சம் 1 கேவி அளவிற்கு சோலார் பேனல் அமைக்கப்பட வேண்டும்.