Monday, November 4, 2013

ஜெயமோகனின் தேவையற்ற ஆராய்ச்சி

இன்றைய ( 04.11.2013) தி இந்துவில் வெளியான திரு ஜெயமோகன்  அவர்களின் 'ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? கட்டுரை படித்தேன். தி இந்து தமிழில் வந்தததிலிருந்து அனைத்து கட்டுரைகளும் மிகச்சிறப்பாக பாராட்டும்படி இருந்தவற்றை பாராட்டி எழுதியுள்ளேன். ஆனால் இந்த கட்டுரை எனது மனதிற்கு உடன்பாடாகத் தெரியவில்லை. இவரது கருத்துக்கள் எப்படி உள்ளதென்றால் செருப்புக்கு தகுந்தவாறு காலை வெட்டலாம் என்று பரிந்துரைப்பது போலுள்ளது. தமிழின் பாரம்பரியமும் தொன்மையும் திரு ஜெயமோகன் அறியாததல்ல. பலநூற்றாண்டு காலம் வாழ்ந்த நம் மொழியை பின்னால் வந்த மொழிக்கு ஏற்ப மாற்ற வேண்டுமென்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. 'தங்கிலீஸ்' என்று தற்போது குறுஞ்செய்திகளில் அனுப்பப்படுவதை அப்படியே கல்விமுறையில் நடைமுறைப்படுத்துவது என்பது பாரம்பரியம் மிக்க பரதநாட்டிய உடையில் காபரே நடனம் ஆடவைத்து பரதக்கலை வளர்க்க நினைப்பது போலாகும். 

இப்போதைய முகப்புத்தகத்தில் உள்ள தமிழர்கள் தற்போது 100க்கு 50 விழுக்காடு பேர் தமிழில் எழுதுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தமிழ் தட்டச்சு தெரியாது, ஆனால் தமிழில் எழுது வேண்டும் என்று நினைத்து திரு.ஜெயமோகன் அவர்கள் கூறியது போல  Amma என்று தட்டச்சு செய்தால் தமிழில் அம்மா என்று உருமாற்றும் செய்யும் மென்பொருள் மூலம் எழுதுகிறார்கள். தான் எழுத வேண்டியது தமிழில் இருக்க வேண்டும் என்று ஒரு தமிழன் எழுத நினைப்பது பாராட்டுக்குரியது. திரு ஜெயமோகன் அவர்கள் கூறுவதைப்போல ஒருசிலர் 'தங்கிலீஸீ' ல்; எழுதுவதுகூட கைபேசியில் தட்டச்சு செய்து அனுப்புவர்களாக இருக்கும் அல்லது கைபேசியில் தட்டச்சு செய்து பழகியவர்களாக இருக்கும். அவர்களுக்கும் கைபேசியில் இலகுவான உருமாற்றம் மென்பொருள் இருக்கும்பட்சத்தில் அவர்களும் தமிழுக்கு மாறுவார்களே தவிர தங்கிலீஸ் தான் வேண்டும் என்று கோரமாட்டார்கள். 
தமிழர்களிடையே ஆங்கில மோகம் வளர்நதுள்ளது. ஆங்கிலத்தில் பேசுவதைத்தான் விரும்புகிறார்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் தமிழ் மொழியைக் தமிழர்களிடையே கொண்டு செல்ல மிக எளிய வழியாக இப்போதைய கைபேசி குறுஞ்செய்தி மற்றும் முகப்புத்தகம் போன்றவை கிடைத்திருப்பதைக் கொண்டு மிக எளிய மென்பொருள் போன்றவற்றின் மூலம் தமிழின் இனிமையை வளர்ப்பதை விடுத்து இன்னொரு மொழிக்கு தமிழை மாற்றுவது என்பது நமது இயலாமையை வெளிக்காட்டுகிறது. 

'எதிர்காலத்திலும் ஆங்கிலமே இங்கே கல்வியின் மொழியாக இருக்கும். அதைத் தடுக்கவே முடியாது வரலாற்றின் போக்கு அது. அதற்கு எதிராக பிடிவாதமாக நிலை கொள்வது அடிப்படைவாதம் மட்டுமே' என்ற திரு. ஜெயமோகன் அவர்களது கருத்து எப்படி இருக்கிறது என்றால் தற்போதைய குடும்ப வாழ்க்கை நடைமுறையில் வயதானவர்களை முதியோர் இல்லத்திற்கு கொண்டு விடுவது வழக்கமாகி வருகிறது. வருங்காலத்தில் இது தவிர்க்க இயலாததாகிவிடும். எனவே 50 வயதானர்களை எல்லாம் முதியோர் இல்லத்தில் இப்போதே சேர்த்து விடுங்கள் என்பது போல இருக்கிறது அவரது வாதம்.

தமிழின் ஆயுள் காலத்தை நிர்ணிக்க நாம் யார்?. தமிழ் செம்மொழி என்றாலும் தமிழ் வாழும்  செம்மொழி பூங்கா துவக்கினாலும் தமிழ் வாழும் செம்மொழிப்பூங்காவை பூட்டி வைத்தாலும் தமிழ் வாழும். இதுபோன்ற எத்தனையோ தடைகளைத் தாண்டித்தான் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழை வளர்க்க நீங்கள் ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போட வேண்டாம். ஆனால் தயவு செயது இதுபோன்ற துளிகூட தமிழை அழிக்கும் எண்ணம் மட்டும் வேண்டாம்.

Monday, October 28, 2013

தொலைக்காட்சியும் தொலைந்து போன நமது நேரமும்

                 தொலைக்காட்சியும் தொலைந்து போன நமது நேரமும்                              
 

  இது திரைப்படத்தின் தலைப்போ அல்லது நாவலின் தலைப்போ அல்ல. தினசரி நமது ஒவ்வொருவர் வீட்டிலும் நடக்கும் நடப்புகளின் ஓர் அலசல். நமது பொன்னான நேரங்களை தேவையில்லாமல் வீணடிக்கின்றோம் என்பதை நாம் இதுவரை உணரவில்லை என்பதற்குதான் இந்த கட்டுரை. நாம் நமது உறவினர் வீட்டிற்கோ அல்லது நண்பர் வீட்டிற்கோ மாலை 6 மணிக்கு மேல் சென்றால் சில நிரந்தர நிகழ்வுகளை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி காணலாம். ஆம் நாம் செல்லும்வரை சத்தமாக ஒடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி சற்று ஒலி அளவு குறைக்கப்படுமே தவிர அணைக்கப்படாது. இதனால் அவர்கள் தெரிவிக்க விரும்புவது நம்மைவிட தொலைக்காட்சி தொடர்கள் முக்கியம் என்பதுதான். பல நேரங்களில் நாமும் இப்படித்தான் செய்திருப்போம்.
உறவுகளைவிட நண்பர்களைவிட அப்படி என்ன இருக்கிறது தொடர்களில் ? தொடரே பார்க்கதவரா நீங்கள் ஒரு சோதனைக்காக ஏதாவது ஒரு தொலைக்காட்சி தொடரை ஒரு வாரம் தொடர்ந்து பாருங்கள். நீங்களும் மேலே சொன்ன பட்டியலில் ஒரு ஆளாகிவிடுவீர்கள். ஆம் அந்த அளவிற்கு ஒரு போதைப் பழக்கத்தைப் போல கொடிய பழக்கம் தொடர்களை பார்க்கும் பழக்கம்.
கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக நம்மை கட்டி போட்டிருக்கும் தொலைக்காட்சி பெட்டிதான் நம் நிம்மதியை கெடுக்க வந்துள்ள சாத்தான். பாமரனும் வாங்கத் தயங்கும் தொலைக்காட்சி அரசியல் பரமபதத்தில் இலவசமாக இல்லங்களை அலங்கரித்த போது ஒவ்வொரு தமிழனும் அடிமை சாசனத்தில் கையொப்பமிட்டதாகவே கருதலாம். ஏதாவது ஒரு காரணத்திற்காக ஒரு வீட்டில் தொலைக்காட்சி பெட்டி அணைக்கப்பட்டிருந்தால் அது ஒரு அபூர்வமான சூழலாகவே இருக்கும்.
தற்போது ஒளிப்பரப்பாகும் எல்லா தொடர்களும் தங்களது டி.ஆர்.பி என்று அழைக்கப்படும்  வுயசபநவ சுயவiபெ Pழiவெ   ஆனது தற்போதைய இடத்திலிருந்து  முன்னேற்ற அல்லது அதிலேயே நிலைத்து நிற்க செய்யும் காரியங்கள்தான் மக்களின்; இதயத்தை பதம்பார்க்க வைக்கின்றது.; தற்போது பல சேனல்களில் இந்தி தொடர்கள் தமிழாக்கம் என்ற பெயரி;ல் வாயசைவிற்கும் வார்த்தைகளுக்கும் சம்மந்தமில்லாமல் மக்களின் இதயத்துடிப்பை பதம் பார்க்கிறது. ஓவ்வொரு தொடரும், தொடரும் என்று போடும் போது கதைக்கு தேவையோ தேவையில்லையோ ஒரு அதிர்ச்சியான காட்சியுடன் முடியும். இதற்கு காரணம் மறுநாள் அந்த தொடரை பார்க்க வைக்க இயக்குநர் செய்யும் வேலை, ஆனால் அந்த அவரின் வேலைதான் நமது பி.பி எகிற காரணமாயிருக்கிறது.
எல்லா தொடர்களையும் விடாமல் பார்க்கும் ஒருத்தருக்கு ஏதாவது ஒரு நாளில் தொடரும் என்று போட்டவுடன்; பி;.பி எடுத்து பார்த்தால் சராசரியாக அவரின் இயல்பான பி.பி யை விட கண்டிப்பாக அதிகமாக இருக்கும். தொடர்களைப் பார்ப்பவர்கள் பி.பி எகிற எகிற அந்த தொடரின டி.ஆர்.பி எகிறும் என்பது தொலைக்காட்சி நிறுவனங்களின் எண்ணம்.  ஏதாவது ஒரு தினத்தில் அந்த தொடதை பார்க்க இயலவில்லை என்றால் பி.பி இன்னமும் ஏறும். அந்த எண்ணத்தை சீரியலின் இயக்குநர்கள் மட்டுமல்ல நேயர்களும் சிறப்பாக இன்றுவரை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். டீவி பார்க்காமல் இரவு உணவு உண்ணும் குடும்பங்கள் இன்று மிகமிகக் குறைவு.
முன்பெல்லாம் தொலைக்காட்சி தொடர்கள் என்றால் அது பெண்களுக்கு மட்டும் என்றிருந்த காலம் போய் தற்போது பெண்களுக்கு நிகராக ஆண்களும் தொலைக்காட்சி தொடர்களுக்கு அடிமையாக மாறியுள்ளது சத்தியமான ஒன்று. எனக்கு தெரிந்து அவசர வேலையாக வெளியே சென்ற ஆணோ பெண்ணோ வந்தவுடன் தொடர்களின் கதையை கேட்பது பெரும்பாலான வீடுகளில் வழக்கமாக உள்ளது. இதுகூட பராவாயில்லை மின்சாரம் தட்டுப்பாடு காலங்களில் தொலைக்காட்சி சீரியல்களின் கதைகள் செல்போன் மூலம் பரிமாரிக்கொள்ள, செல்போன்களின் டாக்டைம் டி.ஆர்.பி மாதிரி ஏறியதுதான் மிச்சம்.
இதையெல்லாம்கூட ஒரு வகையில் வியாபாரத் தந்திரம் என்று வைத்துக் கொண்டாலும், எல்லா தொடர்களிலும் கண்டிப்பாக வித்தியாசமான முயற்சி, பெண் சுகந்திரம் , புதுமை , புரட்சி என்ற பெயரில் நமது கலாச்சாரத்திற்கு மாறான செயல்களை செய்வதற்கோ அல்லது சொல்வதற்கோ தயங்கக்கூடிய ஆபாசமான நிகழ்வுகளை மிக எளிதாக, அதுதான் இந்திய காலாச்சாரம் என்பது போல சுலபமாக காண்பித்து அந்த நிகழ்வை சரி என்பது போன்று வசனங்களை வைத்து சமுதாயத்தை சீரழிக்கும் வித்தைகளை சீரியல்கள் விதைக்கின்றன. கேட்டால் இன்றைக்கு உலகத்தில் நடப்பதை;தானே நாங்கள் காண்பிக்கிறோம் என்பார்கள். உலகத்தில் இதுபோன்ற நமது கலாச்சாரத்தை மீறிய செயல்கள் மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறதா? எத்தனையோ மிக நல்ல விஷயங்கள் நடக்கின்றன அவற்றை கூறுவதை விட்டுவிட்டு கெட்டதை காண்பித்து மக்களை வசியம் செய்கிறீர்கள்? மக்கள் அதைத்தானே விரும்புகிறார்கள் என்பவர்களுக்கு, மக்கள் முதலில் நேரம் போக்கத்தான் தொடர்கள் பார்க்க ஆரம்பித்தார்கள் ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை தொடர்கள் என்ற போதையில் விழ வைத்து விளம்பரதாரர்களை வாழ வைக்கீர்கள்.

எல்லாம் சரி இந்த போதை பழக்கத்தை மாற்ற முடியாதா? முடியும் மனது வைக்க வேண்டும்.
1) உங்கள் வீட்டில் ஒரே ஒரு டிவி மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். அதிகமாக இருந்தால் இல்லாதவர்களுக்கு இலவசமாக கொடுங்கள் மனம் வரவில்லையா பராவாயில்லை ஏதாவது ஒரு விலைக்கு விற்று விடுங்கள்.
2) உங்களுக்கு மிகவும் பிடித்த ஓரே ஓரு தொடரை மட்டும் பார்ப்பதாக முடிவெடுத்து அதனை பின்பற்றுங்கள்.
3) தாங்கள் தேர்ந்தெடுத்த நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் வேறு வேலையைப் பார்க்க ஆரம்பிக்கவேண்டும்.
4) ரிமோட்டில் டிவியை இயக்காமல் டிவியை நடந்து சென்று சேனலை மாற்றுமாறு ரிமோட்டை தொலைத்துவிடுங்கள்.
5) டீவியை பார்த்துக் கொண்டு சாப்பிடுவதை தவிர்க்கவும் முக்கியமாக இரவில்.
6) டீவி பார்க்க தோன்றும் நேரங்களில் குழந்தைகளுடன் விளையாடுவதை வழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.
இதையெல்லாம் பின்பற்றியும் தொலைக்காட்சி உங்களை தொல்லைபடுத்துகிறதா?  கொஞ்சம் யோசியுங்கள் என்றாவது ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்திற்காக காலையில் வழக்கத்திற்கு மாறாக ஒரு மணிநேரம் முன்பாக எழுந்திருந்திருப்போம். அன்று இன்னும் 8 மணி ஆகலயா எனக்கேட்டுக் கொண்டேயிருப்போம். காரணம் ஒரு மணி நேரம் முன்னதாக எழுந்திருத்ததுதான். அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகளை முடித்த பின்பும் நிறைய நேரம் இருப்பதை உணர்வோம். ஒரு மணிநேரத்திற்கே இப்படியென்றால் ஒரு நாளில் தொலைக்காட்சிக்காக நாம் எத்தனை மணிநேரங்களை வீணடிக்கின்றோம் என்று யோசித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.