Monday, November 4, 2013

ஜெயமோகனின் தேவையற்ற ஆராய்ச்சி

இன்றைய ( 04.11.2013) தி இந்துவில் வெளியான திரு ஜெயமோகன்  அவர்களின் 'ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? கட்டுரை படித்தேன். தி இந்து தமிழில் வந்தததிலிருந்து அனைத்து கட்டுரைகளும் மிகச்சிறப்பாக பாராட்டும்படி இருந்தவற்றை பாராட்டி எழுதியுள்ளேன். ஆனால் இந்த கட்டுரை எனது மனதிற்கு உடன்பாடாகத் தெரியவில்லை. இவரது கருத்துக்கள் எப்படி உள்ளதென்றால் செருப்புக்கு தகுந்தவாறு காலை வெட்டலாம் என்று பரிந்துரைப்பது போலுள்ளது. தமிழின் பாரம்பரியமும் தொன்மையும் திரு ஜெயமோகன் அறியாததல்ல. பலநூற்றாண்டு காலம் வாழ்ந்த நம் மொழியை பின்னால் வந்த மொழிக்கு ஏற்ப மாற்ற வேண்டுமென்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. 'தங்கிலீஸ்' என்று தற்போது குறுஞ்செய்திகளில் அனுப்பப்படுவதை அப்படியே கல்விமுறையில் நடைமுறைப்படுத்துவது என்பது பாரம்பரியம் மிக்க பரதநாட்டிய உடையில் காபரே நடனம் ஆடவைத்து பரதக்கலை வளர்க்க நினைப்பது போலாகும். 

இப்போதைய முகப்புத்தகத்தில் உள்ள தமிழர்கள் தற்போது 100க்கு 50 விழுக்காடு பேர் தமிழில் எழுதுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தமிழ் தட்டச்சு தெரியாது, ஆனால் தமிழில் எழுது வேண்டும் என்று நினைத்து திரு.ஜெயமோகன் அவர்கள் கூறியது போல  Amma என்று தட்டச்சு செய்தால் தமிழில் அம்மா என்று உருமாற்றும் செய்யும் மென்பொருள் மூலம் எழுதுகிறார்கள். தான் எழுத வேண்டியது தமிழில் இருக்க வேண்டும் என்று ஒரு தமிழன் எழுத நினைப்பது பாராட்டுக்குரியது. திரு ஜெயமோகன் அவர்கள் கூறுவதைப்போல ஒருசிலர் 'தங்கிலீஸீ' ல்; எழுதுவதுகூட கைபேசியில் தட்டச்சு செய்து அனுப்புவர்களாக இருக்கும் அல்லது கைபேசியில் தட்டச்சு செய்து பழகியவர்களாக இருக்கும். அவர்களுக்கும் கைபேசியில் இலகுவான உருமாற்றம் மென்பொருள் இருக்கும்பட்சத்தில் அவர்களும் தமிழுக்கு மாறுவார்களே தவிர தங்கிலீஸ் தான் வேண்டும் என்று கோரமாட்டார்கள். 
தமிழர்களிடையே ஆங்கில மோகம் வளர்நதுள்ளது. ஆங்கிலத்தில் பேசுவதைத்தான் விரும்புகிறார்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் தமிழ் மொழியைக் தமிழர்களிடையே கொண்டு செல்ல மிக எளிய வழியாக இப்போதைய கைபேசி குறுஞ்செய்தி மற்றும் முகப்புத்தகம் போன்றவை கிடைத்திருப்பதைக் கொண்டு மிக எளிய மென்பொருள் போன்றவற்றின் மூலம் தமிழின் இனிமையை வளர்ப்பதை விடுத்து இன்னொரு மொழிக்கு தமிழை மாற்றுவது என்பது நமது இயலாமையை வெளிக்காட்டுகிறது. 

'எதிர்காலத்திலும் ஆங்கிலமே இங்கே கல்வியின் மொழியாக இருக்கும். அதைத் தடுக்கவே முடியாது வரலாற்றின் போக்கு அது. அதற்கு எதிராக பிடிவாதமாக நிலை கொள்வது அடிப்படைவாதம் மட்டுமே' என்ற திரு. ஜெயமோகன் அவர்களது கருத்து எப்படி இருக்கிறது என்றால் தற்போதைய குடும்ப வாழ்க்கை நடைமுறையில் வயதானவர்களை முதியோர் இல்லத்திற்கு கொண்டு விடுவது வழக்கமாகி வருகிறது. வருங்காலத்தில் இது தவிர்க்க இயலாததாகிவிடும். எனவே 50 வயதானர்களை எல்லாம் முதியோர் இல்லத்தில் இப்போதே சேர்த்து விடுங்கள் என்பது போல இருக்கிறது அவரது வாதம்.

தமிழின் ஆயுள் காலத்தை நிர்ணிக்க நாம் யார்?. தமிழ் செம்மொழி என்றாலும் தமிழ் வாழும்  செம்மொழி பூங்கா துவக்கினாலும் தமிழ் வாழும் செம்மொழிப்பூங்காவை பூட்டி வைத்தாலும் தமிழ் வாழும். இதுபோன்ற எத்தனையோ தடைகளைத் தாண்டித்தான் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழை வளர்க்க நீங்கள் ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போட வேண்டாம். ஆனால் தயவு செயது இதுபோன்ற துளிகூட தமிழை அழிக்கும் எண்ணம் மட்டும் வேண்டாம்.