Thursday, February 11, 2016

மனித தவறுகளுக்கு மனிதர்களே பலியாவதா?


மனித தவறுகளுக்கு மனிதர்களே பலியாவதா?

நாம் ஊருக்குப் போக ஏறும் பேருந்தின் ஓட்டுநர் நன்றாக ஓட்டி விபத்தில்லாமல் நம்மை கொண்டு ஊர் சேர்க்க வேண்டும் என்ற நமது ஓட்டுநருக்காக பிரார்த்தனையுடன் இனி நமக்கு எதிராக ஓட்டி வரும் அனைத்து ஓட்டுநர்களும் எந்தவித பிரச்சனையுமில்லாமல் ஓட்டிச் செல்லவும் பிராத்திக்க வேண்டியிருக்கிறது. ஒரு மனிதனின் தவறு அவரையும் சேர்த்து 16 உயிர்களை பலி கொடுத்ததோடு காயமடைந்தவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் எத்தனை வேதனைகளையும் கொடுத்திருக்கிறது. இறந்தவர்களின் உறவினர்களுக்கு யாரால் ஆறுதல் கூற முடியும்.
சென்ற சனிக்கிழமையன்று மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே நடந்த பேருந்தும் சிமெண்ட் ஏற்ற வந்த லாரியும் மோதி விபத்துக்குள்ளாகி 16 பேர் உயிரழந்த சேதியை படித்த அத்தனை பேரும் நிச்சயம் வருத்தப்பட்டிருப்போம். எனது துணைவியார் கல்லுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிவதால் விபத்து நடந்த அரைமணி நேரத்தில் விபத்து நடந்த இடத்தைத் தாண்டி மதுரை செல்லும் ஒரு காரில் அடிப்பட்ட மூன்று குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துவர, ஒரு குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட, அங்குள்ள மருத்துவர்கள் மற்ற இரு குழந்தைகளுக்கு முதலுதவி சிகிட்சை அளித்து காயத்திற்கு தையல் மற்றும் அவசர சிகிட்சைகள் செய்து மேல் சிகிட்சைக்காக பேரையூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பிவிட்டு அதற்குப் பிறகு வந்த 5 பயணிகளுக்கும் முதலுதவி அளித்து அவர்களையும் திருமங்கலம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு மேல் சிகிட்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதற்குப் பிறகு விபத்து இடத்திற்கு அவசரமாக செல்ல மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கிடைத்த வாகனங்களில் செல்ல எனது துணைவியாருக்கு வாகனம் ஏதுமில்லாததால் எனக்கு தொலைபேசியில் உடனே செல்ல வேண்டுமென்று கூற எனது இருசக்கர வாகனத்தில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றோம். அப்போதே சுமார் 12 பேருக்கு மேல் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டதும் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அங்கு தொலைக்காட்சி நேரடி ஒளிப்பரப்பு வாகனங்களும், பத்திரிகைத்துறையினரும் தகவல்கள் சேகரித்து அனுப்பிக் கொண்டிருக்க, மாவட்ட ஆட்சியர், கூட்டுறவுத்துறை அமைச்சர், மதுரை மேயர் என பலரும் வந்து மீட்பு பணியை பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது எனக்கு எதிரில் சிமெண்ட மூட்டைகளுக்கிடையே சிக்கி இறந்த ஒரு பெண்மணியின் சடலத்தை ஸ்டெச்சரில் வைத்து ஆம்புலன்சிஸில் ஏற்றியதை பார்த்தவுடன் என்னையறியமால் மனதிற்குள் ஒரே வெறுமை ஏற்பட்டது. என்ன வாழ்க்கை இது? பயணம் என்று சென்றவர்கள் திரும்ப வரஇயலாத இடத்திற்கு சென்றுவிட்டார்களே, என்று மனதிற்குள் ஒரே போராட்டம்.
அப்போது என்னைத்தாண்டி சென்ற ஒருவர் எனது கால்களை தாண்டி செல்ல முயன்றவர் கீழே விழுகச் சென்றவரை பிடித்துசார் பாத்து பாத்து விழுந்துடப்போறீங்கஎன்றேன். அவரின் முகம் யாரையோ தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்துஎன்ன சார் என்ன விஷயம்என்றவுடன் அவர்சார் எங்க பையன் 3 வயசிருக்கும் இந்த பஸ்ஸிலதா வந்தான் ஒரு தகவலும் தெரியல சார்என்று அழும் குரலில் கூற, எனக்கு கல்லுப்பட்டி சுகாதார நிலையத்திற்கு வந்து பேரையுர் அரசு மருத்துவமனைக்கு சிகிட்சைக்கு அனுப்பிய குழந்தைகள் பற்றி எனது மனைவி இருசக்கர வாகனத்தில் வரும்போது கூறியது நினைவிற்கு வந்தது. உடனேசார் கொஞ்சம் அமைதியா இருங்க, அநேகமா உங்க குழந்தை பேரையூர் ஜி.ஹெச் சில் இருக்கலாம்என்று கூற அவருக்கு சார் எப்படி இருக்கான் சார்? நல்லா இருக்கானா?” என்று கேட்க உடனே நான் அந்தக் குழந்தைகளுக்கு முதலுதவி செய்த சுகதாரத்துறை பணியார்களிடம் அவரை அழைத்துச் சென்று பேச வைக்க அவர்கள் வந்து மூன்று குழந்தைகளில் ஒன்று இறந்துவிட்டது என்று சொல்ல அவரின் (அவர் பெயர் ஊர் எதுவும் கேட்கத் தோன்றவில்லை) நிலையைப் பற்றிக் கூறவே வேண்டாம். குழந்தை அணிந்திருந்த உடையைப் பற்றி கேட்டால் அவரால் கூறஇயலவில்லை. அவரது தாயார் எங்கே என்றதற்கு, லாரியிலிருந்து கவிழ்ந்த சிமெண்ட் மூடைகளுக்குள் இரண்டு பேர் மாட்டிக்கிட்டுருக்காங்க என்று யாரோ சொல்ல அவர் விபத்து நடந்த பேருந்திற்கு அருகிலேயே அழுது கொண்டிருந்தார். அந்தநேரம் திடிரென்று அந்தக்குழந்தைகளுக்கு சிகிட்சை அளித்த பணியாளர் ஒருவர்இறந்து போன குழந்தையை நம்ம டாக்டரம்மாவும் டாக்டரும் மொபைலில் போட்டா எடுத்திருக்காங்கஎன்று சொல்ல டாக்டர்களைத்தேடி அந்த குழந்தையின் அம்மாவையும் வரச்சொல்லி மொபைலில் புகைப்படத்தை காண்பிக்க அதைப் பார்த்தப் பிறகும் அவரின் அழுகை நிற்கவில்லை. கூட இருந்த எங்களுக்கு இன்னமும் துக்கம் அதிகரிக்க கூட இருந்தவரிடம்என்ன சார் அவங்கிட்ட கேளுங்க இந்த உடைதான் உங்க பையன் அணிந்திருந்தானா? ” என்று மீண்டும் கேட்க அந்தம்மாஇது என் குழந்தையில்லைஎன்று கூறிவிட்டு அழுகையை தொடர்ந்தார். இறந்தது தனது குழந்தை இல்லையென்று தெரிந்தும் யாரோ ஒரு குழந்தையின் இறந்த படத்தைப் பார்த்ததும் தனது குழந்தையைப் பற்றி எண்ணம் அந்தத் தாயை இன்னும் வெகுவாக பாதித்துள்ளதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு தாய் தனது குழந்தை இறந்தால் மட்டுமல்ல யார் குழந்தை இறந்ததைப் பார்த்தாலும் அழுவாள். ஏனென்றால் அதுதான் தாய்மையின் சிறப்பு என்பதை அந்த இடத்தில் புரிந்து கொள்ள முடிந்த்து. எங்களுக்குள் ஒரு சிறு நிம்மதி. எனது மனைவி அந்தம்மாவிடம்அப்படின்னா உங்க பையன் பேரையூர் ஜி.ஹெச் வில இருக்காம்மா நல்லா இருக்கான் கையிலதான் சின்ன அடிதான் பெரிசா ஒன்றுமில்ல நீங்க அங்க போங்கஎன்று கூற அவர்களை அனுப்பிவிட அவர்கள் சற்றே நிம்மதியுடன் அங்கிருந்து உடனே கிளம்பினார்கள்.
அன்று மாலையில் இது தொடர்பான செய்தியை தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த போது விபத்தில் சிக்கிக் கொண்டவர்களின் விவரங்களை அறிந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் சில தொலைபேசி எண்களை அளித்திருந்ததை அறிந்ததும் பிற்பகலில் அந்தக் குழந்தையின் தாயைப் போன்று மற்றவர்களும் அலையாமல் தங்களின் உறவினர்களைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்ற நினைத்ததும் ஒரு நிம்மதி வந்தது. மனதிற்க்குள்ளே மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி கூறிக்கொண்டேன். உண்மையில் இது சாதாரண விஷயமாகத் தோன்றலாம். நாம் அவர்களின் இடத்தில் இருந்து பார்த்தால்தான் நமக்கு அவர்களில் வலி தெரியும். விபத்தில் சிக்கிய நமது உறவினர் என்ன ஆனார்? எங்கிருக்கிறார்? என்ற விவரங்கள் எதுவம் தெரியாமல் அவர்கள் படும் அவஸ்தை …. நினைக்கவே சிரமமாக உள்ளது.  
அந்த நிகழ்வை பார்த்து இரண்டு தினங்களாக ஒன்றுமே தோன்றாமல் ஒரே சிந்தைனையிலேயே இருந்தேன். விபத்து நடந்த இடம் சற்று அகலமான சாலைதான் என்னதான் ஒரு வண்டியை பேருந்து முந்திச் சென்றாலும் எதிரில் லாரி வந்தாலும் ஒதுங்கிச் செல்ல இடமிருக்கிறது. அப்படியிருக்க எப்படி நடந்திருக்கும் என யோசித்துக் கொண்டிருந்த எனக்கு இருதினங்கள் கழித்து திஇந்து நாளிதழில் இந்த விபத்திற்கு காரணம் லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் தூங்கியதால் இருக்கலாம் என்று படித்தவுடன் மனதிற்கு இன்னமும் அது வேதனைத் தந்தது. கொஞ்ச நேரம் அந்த லாரி ஓட்டுநர் லாரியை ஓரமாக நிப்பாட்டி சற்று தூங்கி ஓய்வெடுத்திருந்தால் எத்தனை .இழப்புகளை தவிர்த்திருக்கலாம்.
அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்குத்தான் அதிகமான பணிச்சுமை கூடுதல் நேர பணி என்றிருந்தால் தனியார் ஓட்டுநர்களும் அதைவிட அதிக பணிச்சுமைகளை சுமக்கிறார்கள், சுமக்கவைக்கப்படுகிறார்கள். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி அரசிற்கு சொந்தமான நிறைய புறம்போக்கு இடங்கள் சும்மாவே இருக்கின்றன, அவற்றில் நீண்ட தாரம் பயணிக்கும் லாரி மற்றும் மற்ற வாகனங்கள் நிறுத்தி ஓய்வெடுக்க வசதிகளை ஏற்படுத்தித் தரலாம். இப்போதும் இவை நான்கு வழிச்சாலைகளில் இருக்கிறது என்றாலும் மிக நீண்ட இடைவெளிவிட்டே இவை இருக்கின்றன. அவற்றின் இடைவெளிகள் குறைக்கப்படவேண்டும். அதோடு நான்கு வழிச்சாலையை மட்டும் கவனிக்காமல் மற்ற தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும் இது போன்ற ஏற்பாட்டினை செய்தால் தூக்கத்தோடு வாகனத்தை ஓட்டுபவர்கள்சுட அந்த இடத்திற்கு வரும் போது கொஞ்சம் தூங்கிவிட்டுப் போகலாம் என்ற எண்ணம் தோன்றும். இதனால் பல விபத்துகளை தவிர்க்கலாம். இறந்தவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்குவது எப்படி அவசியமோ அதைப்போன்று சாலையோரங்களில் தூங்கும் வசதியை ஏற்படுத்தித் தருவதும் அவசர அவசியமான ஒன்று.
பெரும்பாலான மரணங்கள் மனித தவறுகளாலயே நடைபெறுகின்ற என்பது தெரிந்தும் அதனை குறைக்கும் முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பதும் ஒரு மனிதத் தவறுதான் என்பதை நாம் புரிந்து கொள்வதேயில்லை. இதற்கான நடவடிக்கைகளை அரசு இனியாவது துரிதமாக எடுத்தால் வலுக்கட்டயாமான மரணங்கள் குறையலாம். தூக்குத் தண்டனைக்குத் தடை கோரும் நாம் நமது தவறுகளால் செய்யும் கொலைகளுக்கு  எப்போது தடைவிதிக்கப் போகிறோம்?