விதியின் விதி
விதி என்ற ஒன்று உண்டா? என்று கேட்டால் எல்லோரும் ஓரே பதிலைக் கூறமாட்டார்கள். அப்போதைய சூழ்நிலையில் கஷ்டத்தில் இருப்பவர்கள் விதி என்னய பாடா படுத்துது என்பார்கள் நல்ல நிலையில் இருந்தால் நா நல்ல இருக்குனும்ங்கிறது என்னோட அதிர்ஷ்டம் என்பார்கள். நன்றாக இருப்பதற்கு விதிதான் காரணம் என்று சொல்பவர்கள் மிகக்குறைவாக இருப்பார்கள். ஒரு விபத்திலிருந்து தப்பித்தால் நல்ல விதி தப்பிச்சிட்டோம்னா சொல்றாங்க என்னோட அதிஷ்டம் நா தப்பிச்சுட்டன்னு தான் சொல்வாங்க.
விதியை மாற்ற முடியுமா என்றால்? பதில் இரண்டுவிதமாகத்தான் வரும். முடியும் என்பர் சிலர் முடியாது என்பர் சிலர். தமிழில் 'விதியை மதியால் வெல்லலாம்' என்ற சொல் வழக்கு தமிழில் உண்டு. ஆனால் கவிஞர் கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலில் 'விதியை மதியால் வெல்லலாம்.., ஆனால் மதியால் வெல்வதே விதியாக இருந்தால்?' என்று கேட்டிருப்பார். அது போலத்தான் விதிக்கென்று ஒரு விதி இல்லை ஏனென்றால் அதுவே விதியாக இருக்கிறது.
எல்லாம் விதிப்படிதான் நடக்கிறது என்றால் கடவுள், கோவில் எல்லாம் எதற்காக? இறை நம்பிக்கை எதற்காக? சடங்குகள், சம்பிரதாயங்கள், வேண்டுதல்கள் எல்லாம் எதற்காக? என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். இதற்கான ஓரே பதில் விதியின் வேகத்தைக் குறைக்க இறையருள் தேவை.
ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் விதியினால் விளையும் தீமைகளைக் குறைக்கத்தான் இறை நம்பிக்கை என்பது. வீட்டில் ஓடும் ஃபேனின் வேகத்தைக் குறைக்க ரெகுலேட்டர் எப்படியோ அப்படித்தான் விதியின் வீரியத்தைக் குறைக்க கடவுளின் அருள் தேவை. ஒரு கதையின் மூலமாக கடவுளின் அருளால் விதி எப்படி மாறுகிறது என்று பார்ப்போம்.
அந்த கிராமத்தில் உள்ள கோவிலின் கோபுரத்தில் இருந்து இரு கிளிகள் பேசிக்கொண்டிருந்தன. அதில் ஒரு கிளி கூறியது
'அதோ கோவிலிலிருந்து வெளி வர்றாரே ஒரு பெரியவர் அவரும் இந்த ரோட்ல சைக்கிள் ரிக்ஷாஒட்டிட்டு வருபவரும் இன்னைக்கு செருப்பால அடி வாங்கனும்னு விதி இருக்கு' என்றது
அதற்கு இன்னொரு கிளி 'அதெப்படி இரண்டு பேருக்கும் ஓரே மாதிரி விதி இருக்கும்'
'ஒரு பேருந்துலயோ அல்லது ரயில்லயோ போறவங்க ஏதாவது ஒரு விபத்தில ஒரே நேரத்தில இறக்கிறாங்கல்ல அது மாதிரிதான் இதுவும் இன்னைக்கு கண்டிப்பா இவங்களுக்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கும்'
'அந்த ரிக்ஷாகாரன் ஒரு குடிகாரன் ஆனா இந்தப் பெரியவர் ஒரு பக்திமான் இரண்டு பேருக்கும் எப்படி ஒரே மாதிரின்னு யோசனையா இருக்கு'
'ஏன் ஓரே மாதிரி இரண்டு பேருக்கு நடக்கக்கூடாதா?'
'பெரியவர் எப்போதும் கடவுளின் நாமத்தையே உச்சரித்துக் கொண்டு ஆறு வேளையும் பூஜை செய்து கொண்டிருக்கிறார். நமக்கு தெரிந்து அவர் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லை அவருக்கு எப்படி நீ சொல்வது நடக்கும்'
'எல்லாம் சரி ஆனால் போன பிறவியில் இவங்க இரண்டு பேரும் செய்த ஏதோ ஒரு பாவத்திற்கு தண்டனையாக இன்றைக்கு அவங்களுக்கு இப்படி நடக்க வேண்டுமென விதி இருக்கிறதே நாம் என்ன செய்வது'
'அப்ப கடவுளை பூஜித்து கடவுளின் நாமத்தையே சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கும் கடவுளை நிந்தனை செய்து கடவுள் பெயரை சொல்வதே பாவம் என்றிருப்பவர்களுக்கும் ஒரே விதிதான் என்றால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது'
'நமக்குள் ஏன் சண்டை நாம இந்த இரண்டு பேரையும் தொடர்ந்து சென்று பார்ப்போம் விதி ஜெயிக்கிறதா? இல்லை அவர் வணங்கும் கடவுள் அவரை காப்பாற்றுகிறாரா என்று'
இரண்டு கிளிகளும் முதலில் ரிக்ஷாக்காரனை தொடர்ந்தன. வழியில் ஒரு முரடன் நன்றாக குடித்திருந்தவன் ரிக்ஷாவை நிப்பாட்டி
'என்னய எ வீட்டில கொண்டு போய் விட்டுடு' என்று சொல்ல ரிக்ஷாக்காரனும் 'உன்னோட வீடு எங்க' ன்னு கேட்க 'என்னோட வீடு எதுன்னு தெரியாம நீ ஏ ரிக்ஷா ஒட்டுற' என்று தகராறு செய்ய கொஞ்ச நேரத்தில ரிக்ஷாக்காரனை குடிகாரன் அடிக்க பதிலுக்கு இவனும் அடிக்க கடைசியில் குடிகாரன் ரிக்ஷாக்காரனை செருப்பை கழட்டி அடித்தான். கூட்டம் அதிகமாக கூடி வேடிக்கை பார்க்க அவமானப்பட்ட ரிக்ஷாக்காரன் அவனுடன் சண்டைபோட முடியாமல் அவமானத்திற்கு பயந்து ரிக்ஷாவை எடுத்துக் கொண்டு மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டே அங்கிருந்து சென்றான். முதல் கிளி 'பார்த்தாயா எத்தனை ஜனங்களுக்கு முன்னால் தேவையில்லாமல் வந்த சண்டையில் ரிக்ஷாக்காரன் அவனது விதிப்படி செருப்பால அடி வாங்கி அவமானப்பட்டு போனான். இதுதான் விதி, விதியை மாற்ற முடியாது.' என்றது 'சரி வா அந்தப் பெரியவர் வீட்டுக்குச் சென்று பார்க்கலாம்' என்று சொல்லி இரண்டு கிளிகளும் பறந்து சென்றன.
அந்தப் பெரியவர் எப்போதும் கடவுளின் நாமமான 'ஈஸ்வரா' என்று உச்சரித்துக் கொண்டேயிருப்பார். நெற்றி நிறைய விபூதியை பட்டையாக அடித்திருப்பார். பார்க்கவே பக்திபழம் போல இருப்பார். கோவில் குளம் என்று தவறாமல் செல்பவர். ஊரிலிருந்தால் காலை மாலை என்று இருவேளையும் அங்குள்ள சிவன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருவார். அங்குள்ள பூசாரி இவர் வராத நாள்களில் இவர் வெளியூர் சென்றுள்ளார் என்று புரிந்து கொள்ளும் அளவிற்கு தினமும் கோவிலுக்குச் செல்வார். அவரது வீட்டின் பூஜை அறையில் தினமும் ஆறுகால பூஜை நடைபெறும். எதற்கெடுத்தாலும் 'ஈஸ்வரா' என்ற சொல்லிக்கொண்டேயிருப்பார். அன்று மாலை தனது வீட்டின் திண்ணையில் வந்து சாய்வு நாற்காலியில் 'ஈஸ்வரா' என்று சொல்லிக் கொண்டே அமர்ந்தார்
அருகிலிருந்த மரத்தில் வந்தமர்ந்த அந்தக்கிளிகள் காத்திருந்தன. மாலை முடியப்போகும் தருணம் அவர் வீட்டின் முன் ஒரு குதிரை வண்டி வந்து நின்றது அதிலிருந்து ஒரு தம்பதியும் ஒரு குழந்தையும் இறங்க பெரியவர் 'ஜானகி இங்க வா யார் வந்திருக்காங்கன்னு பார் நம்ம மகனும் மருமகளும் வந்திருக்காங்க' என்று ஆவலோடு கூறிக்கொண்டு தனது பேத்தியை கொஞ்சியவாறு தூக்கிக் கொண்டு உள்ளே சென்றார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு பெரியவர் வழக்கம் போலத் திண்ணையிலுள்ள அவரது சாய்வு நாற்காலியில் 'ஈஸ்வரா' என்று சொல்லிக்கொண்டு அமர்ந்தார். வீட்டிற்குள் வந்தவர்கள் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. சிறுது நேரத்தில் திண்ணைக்கு தவழ்ந்து வந்த அவரது பேத்தியை அவர் கவனிக்கவில்லை. கண்களை மூடி அமர்ந்திருந்தார். அக்குழந்தை அவரது அருகில் வந்து தனது கையை வைத்து அவரை எழுப்ப நினைக்க கை அருகிலிருந்த செருப்பினை எடுத்து அவர் மீது தூக்கி எறிந்தது. கண்மூடியிருந்தவர் தன்மீது ஏதோ விழுவதைக் கண்டு கண்விழித்து பேத்தியைப் பார்;த்தவுடன் 'டேய் குட்டிப்பொண்ணு தாத்தாவை இப்படியாட எழுப்புறது' ன்னு சொல்லிக் கொண்டு தன் மீதிருந்த செருப்பினை அதன் இடத்தில் வைத்துவிட்டு பேத்தியை தூக்கி கொஞ்ச ஆரம்பித்தார்.
கிளிகள் தங்களுக்குள் ஒன்றுக்கொன்று பார்த்துக் கொண்டன. ஒரு கிளி கூறியது
'பார்த்தாயா கடவுளின் நாமத்தை ஜெபித்துக்கொண்டேயிருப்பவர்களு க்கு கடவுளின் அருள் என்றுமிருக்கும் என்பதை இதோ இந்த நிகழ்ச்சி நமக்கு காட்டிவிட்டது. அவரது விதிப்படி செருப்பால் அவர் அடிவாங்கி விட்டார், ஆனால் அதைகூட சந்தோசமாக மாற்றியது கடவுளின் அனுக்கிரகம்தான்' என்றது அதற்கு மற்றொரு கிளி
'என்னைப் பொறுத்தவரை விதியை மாற்ற முடியாது என்கிற வாதம் ஜெயித்து விட்டது ஆனால் இரண்டு நிகழ்ச்சிகளிலும் ஒரே விதி கடவுள் நம்பிக்கையால் எவ்வளவு பெரிய மாற்றம் உண்டாக்கிவிட்டது? கடவுள் நம்பிக்கை விதியை மாற்றாது ஆனால் விளைவைக் குறைக்கக்கூடும் என்று தோன்ற வைத்துவிட்;டது.' என்றது.
இந்தக்கதையிலிருந்து நாம் அறிந்து கொள்வது விதியிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளை கடவுளின் அருளினால் குறைத்துக் கொள்ளலாம்.
ஒரு மன்னனுக்கு அவரது ஆஸ்தான ஜோதிடர் மன்னருக்கு நாகம் தீண்டித்தான் மரணம் சம்பவிக்கும் என்று சொல்ல மன்னனோ நாகம் வராத இடமாக கடலைத் தேர்தெடுத்து கடலுக்குள் ஒரு மாளிகை அமைத்து வாழ்ந்தான் ஒரு நாள் பூஜை செய்ய வைத்திருந்த பூவிலிருந்த பூநாகம் தீண்டி மரணமடைந்தார் என்றொரு கதையுண்டு. என்னதான் கடலுக்குள் சென்று அவனது உயிரைக் காக்க அவன் முயற்சித்தாலும் அவனது விதியை மாற்ற முடியவில்லை.
விதி வலியதுதான் ஆனால் விதியை நினைத்துக் கொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் இவ்வுலகில் நம்மால் நிம்மதியாக முடியாது. இரவுப்பயணமாக வெளியூர் பயணம் செல்லும் போது ஓட்டுநர் நம்மை நல்லபடியாக நாம் போகும் இடத்திற்கு கொண்டு சேர்;ப்பார் என்ற நம்பிக்கையில்தானே பயணத்தின் போது நிம்மதியாக உறங்கிக் கொண்டு செல்கிறோம். அதைவிடுத்து ஓட்டுநர் நன்றாக ஓட்டுவாரா? இல்லை தூங்கிவிடுவாரா? என்ற சந்தேகம் மனதில் வந்து விட்டால் நம்மால் அன்று இரவு பயணத்தின் கொஞ்சம்கூட உறங்காமல் மனதில் பயத்தை வளர்த்துக் கொண்டு வாகனத்தின் சிறிய குலுங்கலுக்குகூட நமது இரத்த அழுத்தம் உயர்ந்து, காலையில் பயணம் முடியும் போது உயர் இரத்த அழுத்தத்தோடு நமது உடல்நிலையை நாமே பாழ்படுத்திக்கொள்கிறோம். ஓட்டுநரை நம்பியவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் நம்பாதவர்கள் அவர்களே அவர்களை கெடுத்துக் கொள்கிறார்கள். இதைப் போலத்தான் கடவுளை நம்பி அவரிடம் நமது வாழ்க்கையை விட்டு விட்டு யாருக்கும் கெடுதல் எதுவும் செய்யாமல் நமது பணியினைப் பார்த்துக் கொண்டிருந்தால் நாம் நமது விதியைப் பற்றி கவலைப்பட அவசியமில்லை.
நம்மை படைத்த கடவுள் நமக்கு நல்லதே செய்வார் என்ற நம்பிக்கை நம்மை வாழ வைக்கும். நல்லவைகளைச் செய்து இறையருளோடு வாழ நினைத்தால் நமக்கென விதிக்கப்பட்ட விதியின் விளைவை தாங்கும் வல்லமை அந்த இறைவன் அருள்வான்.
திருவள்ளுவர் விதியைப் பற்றி இரண்டுவிதமாகக் கூறியுள்ளார்.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுற் தான்முந் துறும்
விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும் வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும், ஆகவே விதியை விட வேறு எவை வலிiயானவை என்று ஒரு குறளில் அவர் பயமுறுத்தினாலும்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞந்று பவர்
தளர்ச்சியில்லாமல் தொடர்நது முயற்சி செய்து கொண்டேயிருந்தால் நமக்கு விதிக்கப்பட்ட விதியானது புறமுதுகு காட்டி ஓடிவிடும் என்கிறார்.
எனவே விதி நம்மோடு விளையாட வரட்டும் கடவுளின் துணையோடு அவற்றை சந்திப்போம் என்ற தைரியமும் நம்பிக்கையும் நம் மனதில் இருத்திக் கொண்டால் எதிலும் ஜெயமே !!!
No comments:
Post a Comment