இரவு காப்பகங்கள்
இரவு காப்பகங்கள் (Night Shelters) என்பது சமீப நாள்களில் நாளிதழ்களில் பரவலாக அடிபடும் செய்தி. டெல்லி உயர்நீதி மன்றம் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அவர்களை கடிந்து கொண்டது இதனோடு தொடர்புடைய விஷயமாகும். டெல்லி உயர்நீதிமன்றம் வீடில்லாத மக்களுக்கு இரவு காப்பகங்கள் அமைப்பதில் டெல்லி அரசு முறையான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தாமல் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றும் நீதிமன்றம் இந்த விஷயத்ததில் சந்தோஷப்படவில்லையென்றும் கூறியுள்ளது செய்தியாக வந்துள்ளது.
இதற்கான அடிப்படை என்னவென்றால் உச்ச நீதிமன்றத்தில் பொது உரிமைகளுக்கான மக்கள் சங்கம் இந்திய அரசின் மீது தொடரப்பட்ட வழக்கில் வட இந்தியா மட்டுமல்லாதது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இரவில் குளிரினாலோ அல்லது வெப்பத்தினாலோ பொதுமக்கள் உயிரிழப்பது தொடர்வதை தடுக்க இந்திய அரசும் மாநில அரசுகளும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றும் இது இந்திய அரசிலமைப்புச் சட்டம் 21 வது பிரிவிற்கு முரணானது என்றும் வழக்கு தொடர்ந்தது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21 ல் 'ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளின்படி அல்லாமல் எந்த ஒரு மனிதரின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுதல்;கூடாது' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 27.12.2012ல் அனைத்து மாநிலங்களும் வீடில்லாத மக்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21ன் படி உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டுமென ஆணை பிறப்பித்தது.
மேற்படி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 2001 ம் ஆண்டிலிருந்தே நடந்து கொண்டிருக்கிறது. 27.01.2010ம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால தீர்ப்பின் அடிப்படையில் மாநில அரசுகள் இரவு காப்பகங்கள் அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கின. இது தொடர்பான முன்னேற்பாடுகளை கவனிக்க அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி மன்றங்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை அலுவலகங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்திரவிட்டது. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் உடனடியாக இரவு காப்பகம் அமைத்து அதற்கான புகைப்படத்தினை சென்னைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்தது. முக்கியமாக குளிரினால் அதிகமாக பாதிக்கப்படும் மலைவாசஸ்தலமான ஊட்டி கொடைக்கானல், வால்பாறை மற்றும் ஏற்காடு ஆகிய ஊர்களின் உள்ளாட்சி மன்றங்களுக்கும் உத்திரவிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ஒரு நடந்த நிகழ்வினை கூற விரும்புகிறேன். கொடைக்கானல் நகராட்சிப் பகுதியில் இரவு காப்பகம் அமைக்க நகராட்சி ஆணையாளரும் மற்ற வெளி அலுவலர்களும் வீடில்லாமல் தெருவில் தங்குபவர்கள் பற்றி அறிய ஊர் முழுவதும் சுற்றி சுற்றி வந்தனர். இந்த கடையில் ஒருத்தர் இரவில் படுப்பார் என யாராவது சொன்னால் உடனே அந்த கடைக்குச் சென்று பார்த்தால் அன்றிரவு அங்கு யாரும் வந்து படுப்பதில்லை என்று தெரியவே இரவு 12 மணியாகிவிடும் அதற்குப் பிறகு அந்த அலுவலர் குளிரில் வீட்டிற்குச் செல்ல வேண்டும். வெளி அலுவலர்கள் அனைவரும் அலுவலகப்பணிகளை எல்லாவற்றையும் விட்டுவிட்டு இதற்கே இரண்டு மூன்று நாட்கள் அலைந்து, கடைசியில் நான்கு பேரை பிடித்துக் கொண்டு வந்தனர். தெருவில் படுப்பவர்கள் நால்வரை அழைத்துக் கொண்டு வந்தனர் அந்த நால்வருமே கொடைக்கானலில் உள்ள சுற்றுலா பயணிகள் வந்து போகும் இடங்களில் பிச்சையெடுப்பவர்கள்;. இரவில் நகரின் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பகுதியில் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
வீடில்லாதவர்களைத் தேடிப்போன அந்த வெளி அலுவலர் தனக்கு பதவி உயர்வு வந்திருந்தால் கூட இவ்வளவு சந்தோசப்பட்டிருப்பாரா என்பது சந்தேகப்படும் அளவிற்கு நான்கு பேர் கிடைத்துவிட்டார்கள் என்று மகிழ்ச்சியாக இருந்தார். பின்னர் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நகராட்சிக்குச் சொந்தமான ஒரு விடுதியில் அவர்களுக்கு புதிய கம்பளி, பெட்ஷீட், தலையணை அத்துடன் காலை உணவு ஒரு ஹோட்டலில் மதியம் ஒரு ஹோட்டலில் இரவு ஒரு ஹோட்டலில் என தொடர்ந்து தினமும் இரவு காப்பகத்திற்கே கொண்டு வந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சகல வசதிகளுடன் இரவு காப்பகத்தினை நகர்மன்றத்தலைவர் அவர்கள் தலைமையில் துவங்கப்பட்டது. விழா முடிந்து புகைப்படம் எடுத்து சென்னைக்கு அனுப்பப்பட்டு விட்டது.. மறுநாள் காலை அங்கு சென்று பார்த்தால் ஒருவருமே அங்கில்லை. சரி பகல்தானே தங்களது தொழிலுக்கு சென்றுள்ளார்கள் போலும் இரவ வருவார்கள் என்று பார்த்தால் அன்றிரவு யாருமே வரவில்லை. கம்பளி தலையணையுடன் நால்வரும் எஸ்கேப். மறுநாள் ஆணையாளரின் உத்திரவுபடி சம்மந்தப்பட்ட நபர்களைத் தேடி மீண்டும் ஒரு வலைவீசி கண்டுபிடித்தால் நால்வரில் ஒருவருக்கும் இரவு காப்பகத்தில் தங்க பிடிக்கவில்லை என்றதோடு கட்டாயப்படுத்தி மீண்டும் அங்கு எங்களை கொண்டு சென்றால் நாளையே திரும்ப இங்கே வந்து விடுவோம் என உறுதியாகச் சொல்லும்போது உள்ளாட்சி அலுவலர்களால் ஏதும் செய்ய இயலாத நிலை. எங்களுக்குப் பழைய வாழ்க்கைதான் சிறந்தது என்றுக்கூறி சென்று விட்ட பிறகு வலுக்கட்டாயமாக இதில் எதுவும் செய்ய இயலாத சூழ்நிலை. அநேகமாக எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21ன் கீழ் நடவடிக்கை எடுத்;து அவர்களை காப்பாற்ற நினைத்தால் அவர்களோ அதே இந்திய அரசியலமைப்புச் சட்டம் 6ன் படி யாரும் எங்கு வேண்டுமானாலும் சுகந்திரமாக வாழலாம் என்கின்றனர். எனது வாழ்க்கையை நீ தீர்மானிக்காதே என்று சொல்லும் போது நீதிமன்றங்களும் அரசாங்கமும் என்னதான் செய்ய முடியும். உதவிகளை வலியச் சென்று செய்தாலும் அதனை வாங்குவோர் வாங்க விரும்புவதில்லை. அரசாங்கமும் நீதிமன்றங்களும் அரசியலமைப்புச் சட்டத்தை முறையாக அமுல்படுத்த தகுந்த நடவடிக்கைகளை மேற்க்கொண்டால் மக்களின் விருப்பம் வேறாக இருக்கிறது.
No comments:
Post a Comment